vendredi 2 août 2013

தோழர்களுடன் சேர்ந்து நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்; யமுனா ராஜேந்திரன்

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து  பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும்.  சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின்  அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.
நான் கலந்து கொண்டு பாரிசல் நடைபெற்ற பிறிதொரு கூட்டம் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சுப் புரட்சி நூல் குறித்த அறிமுகக் கூட்டம். சூன் 24 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றவென இலண்டனிலிருந்து நண்பர் மு.நித்தியானந்தனையும் என்னையும் நூலாசிரியர் வாசுதேவன் அழைத்திருந்தார். எனது நூல்களின் இலண்டன் அறிமுகக் கூட்டத்திற்கு இ.பத்மநாப ஐயரும், பாரிஸ் கூட்டத்திற்கு தோழர். சிவநேசனும் தலைமையேற்றார்கள். தோழர்.சிவநேசன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர். தோழர். சண்முகதாசனுடன் இணைந்து சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இலண்டன் கூட்டத்தில் நண்பர்கள் பி.ஏ.காதர், நேமிநாதன், இதயச்சந்தின், சேனன், வி.சிவலிங்கம், சசீவன் மற்றும் தோழர். வேலு போன்றவர்கள் உரையாற்றினார்கள். நண்பர் சபேசன் விவாத அமர்வை நெறிப்படுத்தினார். பாரிஸ் கூட்டத்தில் எனது இரு நூல்களை தோழர். பி.ஏ.காதர் அறிமுகப்படுத்த, சுஜந்தனின் நிலம் பிரிந்தவனின் கவிதை நூலை கவிஞர் அருந்ததி அறிமுகப்படுத்திப் பேசினார்.
எனது நூல்களின் இரு அறிமுகக் கூட்டங்களும் மிகுந்த நெருக்கடியின் இடையிலும் தயக்கத்தின் இடையிலும்தான் நடந்தன. முதல் கூட்டத்திற்கு முதலில் பேச்சாளர்களது ஒப்புதலைப் பெற்றுவிட்டேன். கூட்டத்திற்கான அழைப்பிதழை நண்பர்களுக்கு அனுப்பியபோது அன்றைய தினம் மட்டுமே அரசியல் நிகழ்வுகள், மணநிகழ்வுகள், கலைநிகழ்வுகள் என 7 நிகழ்வுகள் இலண்டனில் இருத்ததனையும், ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்ட அந்த நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் நூல் வெளியீட்டு நிகழ்வில் தமது கலந்துகொள்ள இயலாமையைத் தெரிவித்தவர்கள் 25 பேர் வரையிலும் இருந்தார்கள். கூட்டத்தில் பங்குபற்ற விரும்பிய சில நண்பர்கள் கூட்டத்தைப் பிறிதொரு திகதியில் வைப்பதற்கான தமது ஆலோசனையையும் தெரிவித்தார்கள். ஓப்புதல் தெரிவித்த பேச்சாளர்கள் 8 பேரையும் மறுபடியும் பிறிதொரு நாளில் திரட்டுவது என்பது சாத்தியமற்ற சூழலில், கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்துவது எனப் பிற்பாடு தீர்மானித்தோம்.
பாரிஸ் கூட்டமும் இவ்வாறனதொரு சூழலியே நிகழ்ந்தது. கூட்டம் திகதி அறிவிக்கப்பட்டு ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்ட நிலைமையில், அசோக் யோகனதும் வரதனதும் நெருங்கிய தோழரான குமரன் அவசரப்பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்தார். அசோக் மிகவும் மனச்சஞ்சலத்துடன் இருந்தார். கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தோழர்.குமரன் மரணமுற்றார். கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பான சம்சயம் தோழர்கள் அசோக் யோகனுக்கும் வரதனுக்கும் இருந்தது. தோழர். குமரனது இறுதிச் சடங்கும் கூட்டத்திகதிக்கு இருநாட்களின் பின்பு என உறுதி செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலுமானவர்கள் கூட்டம் நடக்காது எனவே கருதினார்கள். நானும் காதரும் பாரிஸ் சென்று சேர்ந்த நிலையில், ஏற்கனவே கூட்டம் தொடர்பான செய்தி ஊடகங்களில் பரவிய நிலையில் கூட்டத்தை நடத்துவது எனும் முடிவை பாரிஸ் நண்பர்கள் எடுத்தார்கள்.
ஓப்புக்கொண்டபடி இரண்டு கூட்டங்களுக்கும் பேச்சாளர்கள் சமூகமளித்தார்கள். இலண்டன் கூட்டத்தில் 25 பேரும், பாரிஸ் கூட்டத்தில் 45 பேரும் கலந்துகொண்டார்கள். இலண்டன் கூட்டத்தில் விவாத அரங்கிற்கான நேரம் திட்டமிட்டபடி அமையவில்லை என்றாலும், பாரிஸ் கூட்டத்தில் பி.ஏ.காதர் அவர்களுடனான விவாத உரையாடல் 75 நிமிடங்கள் வரை நீடித்தது. பாரிஸ் கூட்டம் கச்சிதமாக முடிந்த, நேரம் கடைப்பிடித்;த கூட்டம் என்று சொல்லலாம். இந்த அனுபவங்களின் அடிப்படையில் பிற்பாடு நானும் விம்பம் கே.கிருஷ்ணராஜாவும் உத்தேசித்திருந்த பாபா சாகேப் அம்பேத்கர் தமிழ்மொழி வடிவத் திரையிடல் மற்றும் ஆவணப்பட இயக்குனர் சொர்ணவேல் அவர்களுடனான சந்திப்பு என இரண்டையும் மறுதிட்டமிடலுக்கு உட்படுத்த வேண்டி நேர்ந்தது. கோடைகால உச்சத்தில் வரும் சூலை, ஆகஸ்ட் மாதக் கூட்டங்கள் சார்ந்த அமெரிக்க அனுபவமும் இத்தகையதுதான் என இயக்குனர் சொர்ணவேலும் எமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  ஈழம், அரபுலகு அதனோடு உலக அரசியல் சார்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக நான் தொடர்புபட்ட மூன்று நூல்களும் இருந்தன. நான் கலந்துகொண்டு விமர்சித்த வாசுதேவனின்  பிரஞ்சுப் புரட்சி நூலும் என்னளவில் மேலே குறிப்பிட்ட மூன்று நூல்கள் எழுப்பும், விவாதிக்கும் பிரச்சினைகளையே உள்ளுறையாகக் கொண்டிருந்தது. எனது நூற்கள் சார்ந்து வேறுபட்ட அரசியல் பார்வைகளும் கருத்தியல்களும் கொண்டிருந்த ஏழுபேரே விமர்சன அரங்கில் கலந்துகொண்டனர். இந்த வேறுபட்ட பன்முகப் பார்வைகள் வெளிப்பட வேண்டும், இதற்கிடையில் உரையாடல் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தக் குறிப்பிட்ட நண்பர்களை நூல்கள் குறித்துப் பேச நான் அழைத்திருந்தேன்.
பி.ஏ.காதர், வி.சிவலிங்கம், சேனன், இதயச்சந்திரன் மற்றும் தோழர் வேலு போன்றவர்கள் அடிப்படையில் மார்க்சியப் பகுப்பாய்வையே முன்வைத்தாலும் நடைமுறை அரசியல் சார்ந்து இவர்கள் வேறுவேறு பார்வை கொண்டவர்கள். கல்வித்துறைசார் அறிவுப் பின்புலத்துடன் கோட்பாட்டையும் நடைமுறையையும் அணுகும் பிறிதொரு தலைமுறையைச் சார்ந்தவர் சசீவன். நேமிநாதன் ஈழப் பிரச்சினையில் இடதுசாரிகளின் செயல்பாடு குறித்த கடுமையான விமர்சனங்கள் கொண்ட தமிழ்தேசிய மரபினர். இந்த ஏழு பேச்சாளர்களில் மூன்றுவிதமான அணுகல்களை என்னால் மதிப்பிட முடிந்தது.
கல்வித்துறைசார் மரபுடன் அறிவியல்சார் ஆதாரங்களை முன்வைத்து கோட்பாட்டை அணுகும்முறை முதலாவது. கல்வித்துறைசார் அணுகுமுறையுடன் நடைமுறை அரசியல் ஆதாரங்களை இணைத்துப் பார்க்கும் நோக்கு இரண்டாவது. ஆதாரங்கள் திரட்டிக் கொள்ளப்படாமல் கோட்பாட்டு அடிப்படைகளை விடவும் நடைமுறை அனுபவங்களை முன்வைத்து அரசியலைப் பார்க்கும் பார்வை மூன்றாவது. சோவியத் யூனியன் தகர்வின் பின்னும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் அனுபவவாதமாகவே தேங்கிப்போன ஈழ வரலாறெழுதியல் என்பது கோட்பாடு, ஆதாரம், நடைமுறை போன்றனவற்றை கல்வித்துறைசார் ஆய்வுநெறியுடன் இணைத்து நோக்கப்பட வேண்டும் என்பதனையே நான் எனது நூல்களில்  வலியுறுத்துகிறேன். இந்த அணுகுமுறைக்கு தன்னுணர்வு சார்ந்த மிகை நம்பிக்கைகள் ஒருபோதும் சாதகமானதல்ல.
எனது நூல்களில் முன்வைத்த இதே பார்வையை பிரஞ்சுப் புரட்சி தொடர்பான வாசுதேவனின் நூல் விமர்சனத்திலும் நான் கைக்கொண்டேன். கோட்பாடு, நடைமுறை, கல்வித்துறைசார் ஆய்வு முறையியல் என்பது தன்னளவில் தற்சார்பு அற்றதோ அல்லது இடதுவலது என அரசியல் சார்புகள் கடந்ததோ அல்ல. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பிரஞ்சுப் புரட்சி குறித்த நண்பர் மு.நித்தியானந்தனது பார்வையும் எனது பார்வையும் அன்று ஒருபடித்தானாக இருக்கவில்லை. நாங்கள் எமது ஆதாரங்களாக முன்வைத்த வரலாற்றாசிரியர்களது அரசியலும் ஒருபடித்தானது இல்லை.

ஈழ, புகலிட நிலைமைகளில் இன்று நிலவும் சிந்தனைப்போக்குகள் குறித்து அவதானிப்பை மேற்கொள்வது இங்கு பொருத்தமானதாக இருக்கும். ஈழத்தில் மூன்று ‘பிரதான’ அரசில் போக்குகள் என காணி காவல்துறை அதிகாரம் வடகிழக்கு இணைவு எனும் பாராளுமன்ற தேசியவாத அரசியல் எனவும், கடந்த காலத்தை முற்றிலும் நிராகரித்த அபிவிருத்தி மற்றும் இணக்க அரசியல் எனவும், இலங்கை அரசுடன் சமகாலத்தில் உறவும் முரணும் கொண்ட முஸ்லீம் தேசியவாதம் எனவும் நாம் வரையறுக்கலாம். தேர்தல் அரசியலை நிராகரித்த தீவிர தேசியவாதம், பிரதேசவாதம், தலித்தியம், தமிழ் முஸ்லீம் ஒற்றுமை அரசியல், மார்க்சிய அரசியல் போன்றனவற்றை ‘ஓரநிலையிலுள்ள’ அரசியல் போக்குகள் எனவும் வரையறுக்கலாம்.
தென்னிலங்கை அரசியலில் இரு பிரதான அரசியல் போக்குகளே இருக்கின்றன. சிங்கள பௌத்த தேசியத்தை யாப்படிப்படையிலான சர்வாதிகார அரசியலை நிலைநிறுத்தும் ஆளும் கட்சி அரசியல் எனவும், கருத்தியல் அளவில் இவர்களோடு முரண்படாத தேர்தல் எதிர்க்கட்சி அரசியல் எனவும் நாம் வரையறுக்கலாம். தென்னிலங்கை இடதுசாரிகளுக்கு எனக் ‘குறிப்பான’ எந்தத் திட்டங்களும் இல்லை. விக்ரமபாகு கருணாரத்ன தவிர தமிழர்களின் ஒன்றுபட்ட வடகிழக்கு பூர்வீகநிலம் என்பதனை ஒப்புபவர் எவரும் இல்லை. இன்று இவர்களிடையில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு ‘சிறுபான்மைப் போக்கு’  தமிழர் தேசியத்தை சிறுபான்மை இனவாதம் எனவும், சிங்கள பௌத்த தேசியவாதத்தை பெரும்பான்மை இனவாதம் எனவும் ‘பொதுமைப்படுத்தும்’ போக்கு. வடக்கு மற்றும் தென்னிலங்கையின் இந்த வேறுபட்ட அரசியல் போக்குகளுக்கு இடையில்தான் புகலிட ஈழ அரசியல் என்பதும் தனது நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
புகலிடத்தில் ஸ்தூலமாக ‘மூன்று’ அரசியல் போக்குகள் இருக்கின்றன. இவற்றில், முன்னாள் விடுதலைப் புலிகளின் தனித்தேசம் என்பதற்கே மக்கள்திரள் சக்தி இருக்கிறது. இதுவே வேறுபட்ட தாரைகளுக்கு இடையிலும் பிரதான புகலிடத் தமிழ் அரசியலாக இருக்கிறது. இவர்களுக்கிடையில் எந்தவிதமான ஆழமான அரசியல் கருத்தியல் விவாதங்களும் நடப்பதில்லை. பிற இருபோக்குகள் ’ஓரநிலைப்’ போக்குகள் ஆகும். இந்த இரு போக்குகள் சார்ந்தவர்களே புகலிடத்தில் கருத்தரங்குகளும், புத்தக வெளியிடுகளும், இலக்கிய விவாதங்களும் நடத்துகிறவர்கள். விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பாலான கடுமையான விமர்சனப் பார்வை இவர்களது பொதுப்பண்பு.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக இவர்கள் இரு துருவமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். முதல் பிரிவினர் விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களோடு, இலங்கை அரசு சிங்கள பௌத்தவாத அரசு எனவும், தமிழ் சமூகத்தினுள் சாதியம், பெண்ணுரிமை தொடர்பான ஜனநாயகப்படுத்தல் நிகழவேண்டும் எனவும் சொல்பவர்கள். ஓடுக்கும் இலங்கை அரசுக்கும் ஒடுக்கப்படும் தமிழருக்கும் இருக்கும் முரண்பாட்டைத் தெளிவாக இனம் கண்டு இலங்கை அரசை எதிர்த்துப் போராடுவதைத் தமது கடமை எனவும், சமநேரத்தில் தமிழ்சமூகத்தினுள் புரையோடியுள்ள சாதியம் மற்றும் பெண்ணடிமைத்தனம் போன்றவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.
இந்தத் தமது அரசியலை அவர்கள் வெளிப்படையாகவும் முன்வைக்கிறார்கள். இந்த நோக்கிலிருந்து இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் தமிழ்க் குழுக்களை இவர்கள் நிராகரிக்கிறார்கள்.
பிறிதொரு போக்கினர் விடுதலைப் புலிகளால் ‘மௌனமாக்கப்பட்ட’ சாதியப் போராட்டத்தைத் தமிழ் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்த்துவதை தமது முதன்மை அரசியலாக முன்வைப்பவர்கள். தெளிவாக இந்த அரசியலை இவர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கை அரசு, அதனது ராணுவம், சிவில் சமூகம், தென்னிலங்கை அரசியல் போக்குகள், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் போன்றவை குறித்த விவாதங்களை இவர்கள் தமது உரையாடலில் ’மௌனிக்கச்’ செய்துவிடுகிறார்கள். மறுதலையில், வட இலங்கை அரசியலில் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள், பிரதேசவாதிகளுடன் இணைந்தே தமது ’அரசியலை’ இவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
இவர்கள் இன்றைய இலங்கை நிலைமை தொடர்பாக வெளிப்படையாகச் சொல்வதெல்லாம் இதுதான் : ‘இலங்கையில் விடுதலைப் புலிகள் வீழச்சியின் பின் ஒரு ஜனநாயக இடைவெளி கிடைத்திருக்கிறது‘. விடுதலைப் புலிகளின் கீழான கடந்து முப்பதாண்டு தமிழ்ப் பிரதேச நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பீட்டளவில் வைத்துப் பார்ப்பவர்கள் இதனை மறுதளித்துவிடமுடியாது. ஆனால், இந்த ‘ஜனநாயக இடைவெளியின்‘ குணரூபம் எத்தகையது, இதில் இலங்கை ராணுவம், யாப்பு போன்றவற்றின் இடம் என்ன என்பது குறித்த ஆழமான விசாரணைகளுக்குள் இவர்கள் செல்வதில்லை. இது பெரும்பான்மையினத்துக்கு இசைவான ஜனநாயகம் என்பதனையோ, சிறுபான்மையினத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் தனது அதிகாரத்தை இறுக்கும் ஜனநாயகம் என்பதனையோ இவர்கள் முன்வைப்பதில்லை. 
சாதியெதிர்ப்புப் போராட்டம் என்பதனை தமிழர்களுக்களிடையில் ஒரு மோதல் நிறைந்த பகைமைப் போராட்டமாகவே இவர்கள் முன்னெடுக்க விளைகிறார்கள். பரந்துபட்ட அளவில் அரசு, யாப்பு, சட்டவாக்கம், அதில் தமிழருக்கு உள்ள உரிமைகளின் வரையறைகள் என்பதாக இவர்கள் இதனை முன்னெடுக்க விழைவது இல்லை. இந்த முரண் புகலிடத்தில் தமக்கான எதிரிகளை தமது முன்னாள் புலி எதிர்ப்பு நேசசக்திகளுக்கிடையிலேயே கட்டமைப்பதாகவும் அல்லது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றின் முகாந்தரத்தில் தமது இலங்கை அரசு ஆதரவு அரசியலை வைத்துச் செயல்படுவதற்கான யத்தனமாகவும் வெளிப்படுகிறது. 
இத்தகைய அரசியல் போக்குக் கொண்டவர்கள் தமது நிகழ்வுகளில் பேசப்படுபவற்றையோ அல்லது தமது அரசியல் நிலைபாடுகளையோ ஒருபோதும் ஆவணப்படுத்துவது இல்லை. எழுத்தில் வெளிப்படுவதெல்லாம் ஏச்சுக்களாக, வசவுகளாக, தூஷணங்களாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இந்த நிலைமையில் அரசியல் உரையாடல் என்பது புகலிடத்தில் நிழல் யுத்தமாகவே நிகழ்ந்து வருகிறது.

அசை கோட்பாட்டிதழும் சமூகப் பாதுகாப்புக்கான செயற்பாட்டு மையமும் இணைந்த பாரிசில் நடத்திய கூட்டத்தில் ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்றுப் பார்வையை முன்வைத்துப் பேசிய பி.ஏ.காதர் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் முன்வைத்த வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக நிலம் எனும் வரையறை முக்கியமானது என்றார். அந்த நிலத்தை உறுதிப்படுத்துவது இன்று பிரதானமானது என்றார். விடுதலைப் போராட்ட அனுபவங்களை முற்றிலும் மறுத்த நிலை இன்றைய மேட்டுக்குடித் தமிழ்த் தலைமையினரின் தேர்தல் அரசியலில் இன்று முகம் காட்டுகிறது என்றார்.
சாதி எதிரப்புப் போராட்டம் நடத்தப்பட வேண்டியது எனக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைபாடு இலங்கை அரச அதிகாரத்துடன ஒத்தோடுவதாக இருக்க முடியாது என்றார். விடுதலைப் புலிகளின் தவறுகளை இலங்கை அரச ஒடுக்குமுறையை நியாயப்படுத்த உபயோகிக்க முடியாது என்றார். சாதியப் போராட்டத்தின் அவசியத்தையும் விடுதலைப் புலிகளின் தவறுகளையும் முன்வைத்துப் பேசியவர்கள் இலங்கை அரசு தொடர்பான மதிப்பீடுகள் எதனையும் முன்வைக்கவில்லை என்பதோடு, பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதியை எவ்வாறு யாப்புரீதியிலான சர்வாதிகாரி என வகைமைப்படுத்த முடியும் என்ற கேள்வியோடு தமது வாதத்தை முடித்துக் கொண்டார்கள். காதர் அவர்கள் இட்லர் தமது அதிகாரத்துக்கு பாராளுமன்ற முறையைப் பயன்படுத்தியதை அவர்களுக்கு நினைவூட்டினார்.
சாதியமும் விடுதலைப் புலிகளும் தொடர்பான விவாதம் இலண்டன் கூட்டத்திலும் வந்தது. எனது ஈழம் குறித்த நூலிலுள்ள கட்டுரை பிரச்சார வகையில் எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரை எந்த நிலைபாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டது என்பதையோ அது தனது வாதங்களுக்கு முன்வைக்கும் ஆவண ஆதாரங்களையோ குறித்து எந்தவிதமான மறுப்பையும் அந்த விமர்சனம் முன்வைக்கவில்லை. விடுதலைப் புலிகள் சாதியவாதிகள் இல்லை, அவர்கள் சாதியை குற்றத்தண்டனைசச் சட்டத்தினுள் கொண்டு வந்தார்கள், தீண்டாமையைக் கிரிமினல் குற்றம் என வகைப்படுத்தினார்கள் என்பதை ஆவண ஆதாரங்களுடன் முன்வைத்தது குறிப்பிடப்பட்ட கட்டுரை.
பிரதான ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சியர்கள் வர்க்கத்தை முன்னிலைப்படுத்தி பிற பிரச்சினைகளை ‘மௌனிக்கச்‘ செய்தது போல, விடுதலைப் புலிகளும் தேசிய இனத்தை முன்னிறுத்தி பிற பிரச்சினைகளை ‘மௌனிக்கச்’ செய்தார்கள் எனப் பேசுகிறது அக்கட்டுரை. விடுதலைப் புலிகள் அமைப்பு சாதியத்தைக் காக்கும் அமைப்பு எனும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்விணையாகவே அக்கட்டுரை வரலாற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டது.
நூல் நெடுகிலும் இதைப் போல வரலாற்றையும் ஆதாரங்களையும் முன்னிறுத்தி புரட்சிகர ஸ்தாபனம், மக்களுக்கும் இயக்கங்களுக்குமான உறவு, முஸ்லீம் பிரச்சினை, மாற்றுக் கருத்துக்கள் தொடர்பான இயக்க அணுகுமுறை, உளவமைப்பின் தன்மை போன்றவற்றை முன்வைத்து விடுதலைப் புலிகளின் தவறுகள், மனித உரிமை மீறல்கள் என விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் ஆதார எழுதுமுறை வரலாற்றை முன்னிலைப்படுத்தியதேயொழிய குறிப்பிட்ட எவருக்கும் முழுமையான சார்பு அல்லது மறுப்பு நிலை கொண்டதல்ல; அது நூலினது நோக்கமாகவும் இருக்கவில்லை.
பாரிஸில் நடைபெற்ற வாசுதேவனது பிரஞ்சுப் புரட்சி நூல் பற்றிய விமர்சனக் கூட்டத்திலும் எனது நூல்கள் தொடர்பான இலண்டன் கூட்டத்திலும் ரொபேஷ்பியர், ஸ்டாலின், மாவோ, குவேரா போன்றவர்களை அடுத்து பிரபாகரனது பெயரை உச்சரிப்பதோ முன்வைத்துப் பேசுவதோ ஒரு பாவம் என்பது போன்ற பார்வை முன்வைக்கப்பட்டது. ஆதங்கம் அல்லது தன்னுணர்வு எனும் நிலைபாட்டிலிருந்தே இத்தகைய நோக்குகள் முன்வைக்கப்பட்டன. ஆதங்கம், தன்னுணர்வு என்பதற்கு அப்பால், வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், புரட்சிகர ஸ்தாபனம், கொரில்லாப் போர்முறை, மாற்றுக் கருத்துக்கள், புரட்சியில் வன்முறை போன்ற மையமான போராட்டப் பிரச்சினைகளை முன்வைத்து இத்தகைய ஒப்பீடுகளை நிகழ்;த்த முடியும், நிகழ்த்த வேண்டும் என்பதே எனது பார்வை.
ரொபேஷ்பியர், மாவோ, குவேரா போன்றவர்களை ஒப்பிட ஸ்டாலினை ஒரு சிந்தனையாளர் எனச் சொல்ல முடியாது. இரண்டாம் உலகப் போர்காலத்தில்  ஸ்டாலினது மாபெரும் செயல்களோடு பிறரை ஒப்பீடு செய்து பேசமுடியாது. குவேராவின் முழு மானுட விடுதலை சார்ந்த தத்துவத் தோய்வுகளோடு சிந்தனைத் தளத்தில் பிரபாகரனை ஒப்பீடு செய்ய முடியாது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளான டேவிட் அய்யா தனது எழுநா நேர்முகத்திலும், மாணவர் பேரவை முன்னோடியான சத்திய சீலன் தனது தீராநதி நேர்முகத்திலும் சொல்வது போல, முப்பதாண்டுகாலப் போராட்டத்தில் அவரது தவறுகளோடு பிரபாகரனது கடப்பாடு கொண்ட தலைமையை கவனம் கொண்டு, பிற புரட்சிகளின் ஆளுமைகளோடு அவரை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை, அதாவது பிறரைப் போல அவரையும் ‘வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை’ இருக்கிறது. இதனை இனியொருவில் வெளியான ஐயரது கட்டுரைகள் ஏலவே செய்தும் இருக்கின்றன.

சாதியப் போராட்டம், பெண்ணுரிமை, விடுதலைப் புலிகளின் தவறுகள் குறித்த விமர்சனம் என்பதோடு மட்டும் இலங்கை எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் முற்றுப்பெற்றுவிட முடியாது. அந்த முழுத் தீவு தழுவியும் தனது அதிகாரத்தைக் கொண்டிருக்கிற சிங்கள பௌத்த நிறுவனம், அரசு, சிவில் சமூகம், அதனைக் காவி நிற்கும் இடதுசாரிகள் என்பது குறித்த மதிப்பீடுகள் இன்றி இத்தகைய போராட்டம் முழுமை பெறவும் முடியாது. இதனை இன்று முஸ்லீம் சமூகமும் நேரடியாக முகம் கொடுக்கிறது.
சிங்கள இடதுசாரிகள் குறித்த நம்பிக்கைகள் மனோரதியத்தின் அடிப்படையில் இருக்க முடியாது. இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகளை எந்த இடதுசாரியும் காத்து நிற்கமுடியாது. அப்படிக் காத்து நிற்பவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருக்கவும் முடியாது. தயான் ஜயதிலக நடந்து முடிந்திருப்பது 'தேசிய விடுதலை யுத்தம்' என்கிறார். தேசிய விடுதலை யுத்தம் என்பது ஆக்கிரமிப்பரளர்களுக்கும் காலனியவாதிகளுக்கும் எதிரான யுத்தம். விடுதலைப் புலிகள் அரசியல் தவறு செய்தார்கள் என்பது வேறு அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது காலனியவாதிகள் என்று மதிப்பிடுவது வேறு. தயான் ஜயதிலக நடந்து முடிந்த யுத்தத்தை அப்படித்தான் வர்ணிக்கிறார்.
வாசுதேவ நாணயக்காரவுக்கு வடகிழக்கைப் பிரித்தது பிரச்சினையில்லை. அது தமிழரின் பூர்வீக நிலம் இல்லை என்பது அவரது நிலைபாடு. வடமாகாணத்தில் காணி, காவல்துறை அதிகாரத்தோடு அவரது தீர்வு முடிந்துவிடுகிறது. இவரை அடிமனநிலை இனவாதி எனக் குறிப்பிடுவது எவ்வாறு தவறாகும்? குளோபல் தமிழ் நியூஸ் இணையதளம் இன்று சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்து வெளியிடுகிற நம்பகத்தன்மையுள்ள ஊடகம். நிகழ்வுகளை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுகிற ஊடக அறம் கொண்ட இணையதளம். வசவுகளாலும் தூஷணப் பின்னூட்டங்களாலும் நிறைந்த தளம் இல்லை அது. பிற அநாமதேய தமிழ் தளங்களைக் கேள்விக்கு உட்படுத்துவது போல அதனை, அதனது ஆதாரங்களை எவரும் சாதாரணமாகக் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

இறுதியாக, குறிப்பிட்ட அரசியல்சார் அமைப்புக்களின் பார்வையை அரசியல் சாராத பொது அமைப்புகள் அல்லது கலை இலக்கிய அமைப்புக்களின் மீது சுமத்தும் ஒரு அவலமான போக்கு குறித்த அவதானங்களுடன் எனது குறிப்புக்களை நிறைவு செய்ய விழைகிறேன். இன்று புகலிட நாடுகளில் பல்வேறு இயக்க அமைப்புக்கள், பல்வேறு அரசியல், கருத்தியல் சார் அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. பொதுவான கலை இலக்கிய அமைப்புக்களை இவ்வாறான இயக்கச் சார்புள்ள, அரசியல் சார்புள்ள, கருத்தியல் சார்புள்ள அமைப்பாக இருக்க வேண்டும் என எவரும் வலியுறுத்த இயலாது; அது கூடாவும் கூடாது.
கலையும் இலக்கியமும் அரசியல், கருத்தியல் சார்புகள் கொண்டிருந்தாலும் அதற்கென சுயாதீனத்தன்மையும் உண்டு. இந்த சுயாதீனத் தன்மையை எவரும் அங்கீகரிப்பதோடு இத்தகைய கலை இலக்கிய அமைப்புகள் பல்வேறு அரசியல், கருத்தியல் உரையாடலுக்கான பொது அமைப்பாகவே பேணப்பட வேண்டும். அந்த நோக்கிலேயே எனது நூல் விமர்சன அரங்குக்கும் நான் பல்வேறு அரசியல், கருத்தியல் கொண்ட விமர்சகர்ளை விம்பம் அமைப்பாளரிடம் பரிந்துரை செய்தேன். கலை இலக்கிய அமைப்புக்கள் தத்தமது அரசியல் கருத்தியல் காவிகளாகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பதும், அது இயலாபோது அவைகளின் மீது வசைகளை ஏவுவதும் கருத்துச் சுதந்திரத்திற்கான ஆதாரமாக இருக்க முடியாது. அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்து இயங்குபவர்கள் இதனை மனதில் இருத்திச் செயல்பட வேண்டியது இன்று முக்கியமானதாக இருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire