lundi 5 août 2013

அதிகாரங்களை என்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாது – ஜனாதிபதி

MRமுப்பது வருட கால ஏகாதிபத்திய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமது அரசாங்கம் வடக்கில் மக்கள் ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கினோம்.
இப்போது வட மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது.
யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட சுமார் 14,000 புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்தில் அவர்களை இணைத்துள்ளோம்.
தமிழ்க் கூட்டமைப்பு வடமாகாண சபையைக் கைப்பற்றி காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரினால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி
சட்டப்படி காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்னிடமே உள்ளன. அரசியலமைப்பிலும் அது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என்னிடமிருந்து இந்த அதிகாரங்களை இலகுவில் எவராலும் பறித்துவிட முடியாது. எனது வரலாற்றில் அத்தகையதொரு மாற்றம் ஒருபோதும் ஏற்படாது.
வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி
இலங்கை கடல் எல்லைக்குள் வெளியார் வந்து மீன் பிடித்தால் கைது செய்யுமாறு நாம் உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு நாம் நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் எமது கடற்படையினர் அப்பாவிகளான தமது நாட்டு மீனவர்களைக் கடலில் வைத்துத் தாக்குவதாகப் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். இது குறித்து இந்திய அரசிற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
யுத்த காலத்தில் எமது மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதனை இந்திய மீனவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தமையே உண்மையான வரலாறு. இப்போது யுத்தம் முடிந்து விட்டதே.
எமது மீனவர்கள் எமது கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதையே அவர்கள் தடுக்க முனைகிறார்கள். முடிந்தளவு சமரசமாகச் செல்வோம்,
எல்லை தாண்டி வந்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று எமது மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்றால் கைது செய்யுமாறு இந்திய அரசிற்கு அறிவித்துள்ளோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire