vendredi 2 août 2013

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு


சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெலிவேரிய நகரில் பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.
மக்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த போராட்டத்தை பொலிசாரும் இராணுவத்தினரும் அடக்க முற்பட்டபோது, போராட்டம் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் தாக்குதல்'

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நுழைந்த படையினர் தாக்குதல் நடத்தினர்'
'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நுழைந்த படையினர் தாக்குதல் நடத்தினர்'
பிரதேசத்தில் கழிவுநீரைக் கொட்டுகின்ற தொழிற்சாலை ஒன்றை மூடிவிடுமாறு கொழும்பு கண்டி வீதியில் பெலும்மஹர என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாகவே போராட்டம் நடந்துவந்துள்ளது.
அந்தப் போராட்டம் பொலிசாரால் அடக்கப்பட்ட நிலையிலேயே, அது வேலிவேரிய பகுதியில் பெரும் கலவரமாக மாறிப்போனது.
வெலிவேரிய பகுதிக்குச் சென்று பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர், இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
வெலிவேரியவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர், அங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்களையும் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
இதேவேளை, வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கும்பலே இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
'அரசியல் வெற்றி ஏதும் இல்லாமல் காத்திருக்கின்ற எதிர்க்கட்சியினர் இப்படியான சம்பவங்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேட முயன்றுவருகிறார்கள்' என்று கூறினார் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
இதேவேளை, பெற்றோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீதே தாம் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire