jeudi 8 août 2013

ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை வட மாகாணத்தில் தான்;தேர்தல் கண்காணிப்பு

ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு மிகவும் அதிகளவிலான இராணுவத்தினர் உள்ளனர். சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடக்குப் பிரதேசத்தைக் கருத முடியும்.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறது. அது பொருள்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது. வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்தப் பணிகளில் இருந்து விலக்கி வைக்காமல் தேர்தலை நடத்துவது எந்த வகையிலும் நேர்மையானதல்ல.
எனினும் செயற்பாடுகளை வரையறுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ளது போல், பொலிஸாருக்குச் சிவில் பணிகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்குத் தற்காலிகமாவோ, குறுகிய காலத்திற்கோ தீர்வு காணமுடியும்.
நிலைமை இப்படியிருக்க, இதை போர்த்து மூடி தேர்தல் வெற்றிக்காக சில தேர்தல்காலச் சலுகைகளும் இடம் பெறுகின்றன.
இராணுவம் பல இடங்களில் வெளியேறிவிட்தாகவும், பல இடங்களில் மக்கள் குதூகலமாக குடியேறிவிட்டதாகவும், வடக்கு வசந்தத்தின் பிதாமகன் (சர்வாதிகார-இராணுவ-ஆளுனர்) சொல்கின்றார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் தமது காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் புதல்வர் எஸ்.ஜே.கிறிஸ்டியன் கதிர்காமர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அங்கு தமது பூர்வீக காணிகளை சுவீகரிக்கும் முனைப்புக்கள் இடம்பெற்று வருவதாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உண்மையில் இது எதைத்தான் காட்டுகின்றது.? இவருக்கே இந்நிலையென்றால், தேர்தலின் பின் மக்களின் நிலை எப்படியருக்கும்? வடக்கின் வசந்தம் எப்படியிருக்கும்?
டக்ளஸ் சொல்கின்றார் எம்மை வெல்லவைத்தால், நாம் போராடிப்பெற்ற 13-வதின் சகலதையும் பெற்றுத்தருவோம் என….. 13-வதின் பலதை பறிக்க முற்பட்ட ஜனாதிபதியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்லமுடியாமல், ஒளிந்திருந்தவர்தான் டக்ளஸ். இப்பேர்ப்பட்ட வீரன் எதிர்காலத்தில் இதற்காகப் போராடுவாரா? தனது நீண்டகாலக் கனவு, வடமாகாணசihத் தேர்தல், முதலமைச்சர் பதவி எனச் சொன்ன டக்ளஸ்இ இப்போ மகிந்தா சொன்னதன் பேரிலேயே தேர்தலில் நிற்கவில்லை என்கின்றார்.
இவைகளை எதுவாகக் கணிக்கலாம்? மக்களிற்கு காதில் பூ வைக்கும் தேர்தல்கால கோமாளித்தனமாகத்தான் கொள்ளலாம்.
"வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறது. அது பொருள்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது. வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்தப் பணிகளில் இருந்து விலக்கி நாட்டின் தெற்கு பகுதிகள் போல் ராணுவச் செயற்பாடு இருக்க வேண்டுமென்ற "கபே" செயலாளரின் கூற்று எதன்பாற்பட்டது?
ஓர் சிவில் சமூகச் செயற்பாடு அச்சமூகத்தின் அச்சாணியான ஜனநாயக விழுமியங்களின் செயற்பாட்டின் பாற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதேயாகும்.
வடக்கின் இன்றைய ராணுவ சிவில் நிர்வாகச் செயற்பாடும் அதன் "அர்ப்பணிப்பற்ற சேவை" என்பது, வடக்கில் எப்பிரச்சினைகளும் இல்லையென உலகிற்கு காட்டும் சினிமாப்பட உத்தியே. இதில் ராணுவம் மக்களுக்கு ரத்தம் கொடுக்கின்றது என பொங்கி எழும் அரச அடியாட்களின் அரச பக்திப்-பாமரத்தை என்னே என்பது.
ராணுவம் மக்களுக்கு ஆனதல்ல, என்பதை நேற்றைய கம்பகா பலியெடுப்பு மூலமாவது அரச பக்திப் பரவசங்களும், அரச எடுபிடி அடியாட்களும் உணர்வார்களா?

Aucun commentaire:

Enregistrer un commentaire