vendredi 9 août 2013

சட்ட மா அதிபர் திணைக்களம்;ஆறு மாத காலத்தில் இரண்டு மொழிகளிலுமான தேசிய அடையாள அட்டை


ஆறு மாத காலத்திற்குள் இரண்டு மொழிகளிலுமான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம், உச்ச நீதிமன்றில் வாக்குறுதி அளித்துள்ளது. பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இரண்டு மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வெளியிடாமையினால் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாக, மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் தனஞ்சய குருகே என்ற நபர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது பிரதி சொலிசுட்டர் ஜெனரல் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குள் மூன்றுமொழிகளிலுமான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட தேசிய அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஆட்பதிபு திணைக்கள ஆணையாளர் நாயகம், சட்ட மா அதிபர் உள்ளி;ட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire