மாணவர்களை வைத்து அரசியல் செய்து தங்களது அரசியலை வளர்த்துக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றார்கள். அதற்கு பெற்றோர்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாழைச்சேனை – பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு நாடு இன்று அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றதைச் சகித்துக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள் மாணவர் சமூகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கின்றார்கள். அவர்களது கருத்துக்கு மாணவர்கள் உடன்பட்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. அவ்வாறு பின்பற்றுவதால் அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக்கொள்வார்களே ஒழிய, அவர்களின் கருத்துக்கு ஏற்ப நடக்கின்ற மாணவர்கள் தங்களது துறையில் நிச்சயம் தோற்றுப் போவார்கள். அதற்கு பெற்றோர்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
பிள்ளைகள் கல்வி கற்கும் காலங்களில் அவர்கள் கல்விக் கூடங்களுக்கு அனுப்பிவிட்டோம.; அவர்கள் படித்துக்கொள்வார்கள் என்று பொற்றோர்கள் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. அவ்வாறு இருப்பதால் மாணவர்கள் தவறான முறையில் வழி நடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி வளர்ச்சியில் அவர்களது பெற்றோர்களது முழுப்பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்பிள்ளை சிறந்த கல்வியலாளராக திகல முடியும்' என்றார்.
இந்த நிகழ்வில் கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் எச்.கெட்டிகே, கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire