samedi 1 décembre 2012

சீனாவின் தலையீடு அதிகரிப்பு - தடுக்கும் வகையில் 'மூவரணி' அமைப்பு

இந்து மாக்கடலின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு இந்தியா, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் முதலாவது 'மூவரணி' ['troika'] ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்து மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை எதிர்ப்பதை நோக்காகக் கொண்டே இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டில் செயற்படுத்த திட்டமிட்டுள்ள இம்மூவரணிக்கான தலைமைப் பொறுப்பை அவுஸ்திரேலியா எடுக்கவுள்ளதாக அந்த நாட்டுக்கான உயர் ஆணையாளரும் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவுச் செயலருமான பீற்றர் வர்கீஸ் [Peter Varghese] தெரிவித்துள்ளார்.
இந்து மாக்கடலானது இந்தியாவுக்கு எவ்வளவு கேந்திர முக்கியத்துவத்தை வழங்குகின்றதோ அதேபோன்று அவுஸ்திரேலியாவின் நகர்வுகளிலும் இது முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தற்போது கிழக்காசியா என்பதை முதன்மைப்படுத்துவதை விட 'இந்து-பசுபிக்' [Indo-Pacific] என்கின்ற பதம் அதிகம் முதன்மைப்படுத்துகிறது. முன்னரைப் போலல்லாது, தற்போது இந்து-பசுபிக் பிராந்தியமானது இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கிடையில் அதிக தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவுடனான எமது உறவில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எமது உறவில் ஏற்பட்டிருந்த இடைவெளியை நாம் தற்போது நிரப்பி வருகிறோம். மாணவர்களின் பாதுகாப்பு விவகாரமானது எமக்கு அப்பாற்பட்டது. இதேபோன்று யுரேனியம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தற்போது தீர்வுகாணப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுநிலை தற்போது மிக நெருக்கமாகியுள்ளது" என வர்கீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்ட ரீதியாக குடிபெயர்கின்றவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது, தொழில்சார் அனுபவம் வாய்ந்த இந்தியத் தொழிலாளர்களும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதாக வர்கீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்தியாவுடன் உறவு பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தது. முதற்தடவையாக இவ்விரு நாடுகளும் இணைந்து பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை முன்னெடுக்கவுள்ளன. கிழக்காசியா தொடர்பாக இவ்விரு நாடுகளும் இரு தரப்புப் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றன.
இந்திய – அவுஸ்திரேலிய அணுகுமுறையானது பிராந்திய பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கான முக்கிய சக்தியாக காணப்படும் கிழக்காசிய உச்சிமாநாட்டை மேலும் பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக வர்கீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசியாவில் சில முக்கிய மூலோபாய ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்ற நேரம் இதுவாகும். இது உடனடி மாற்றமாகக் காணப்படுகிறது. இப்பிராந்தியத்தில் வரலாற்று ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதில் எமக்கு உதவக்கூடிய நிறுவகங்களை அமைக்க நாம் முயற்சி செய்துவருகிறோம். நிறுவக ரீதியில் ஆசிய வரலாற்றில் பலமான மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மிகப்பலமான கட்டமைப்புக்களை அமைப்பதன் மூலம் இந்துமாக்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய பொருளாதார மற்றும் மூலோபாய விவகாரங்களில் நல்ல செழுமையை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரண்டும் பல பொது நோக்கங்களைக் கொண்டுள்ளன" எனவும் வர்கீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக கிழக்காசிய உச்சிமாநாடானது எவ்வாறு இலகுவில் சீர்குலைக்கப்படும் என்பதை கடந்த வாரம் இடம்பெற்ற கிழக்காசிய உச்சிமாநாடு காண்பிப்பதாக வர்கீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
"பிராந்தியத்தில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக அடுத்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ப முக்கிய கோட்பாடுகள், முரண்பாட்டை நீக்குவதற்கான அமைதி வழியிலான தீர்வுகள் மற்றும் அனைத்துலகச் சட்டத்தை மதிக்கின்ற தீர்மானம், ஆழ்கடல் பாதுகாப்பு போன்றன தொடர்பாக அடுத்த உச்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படுவது இன்றியமையாத ஒன்று" எனவும் அவுஸ்திரேலியாவின் புதிய வெளியுறவுச் செயலர் வர்கீஸ் குறிப்பிட்டுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire