இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல பங்காளி கட்சிகள் அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்க இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் அனுப்படவுள்ள ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன.
இதேவேளை, ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் 13-ம் திருத்தத்தை நீக்கக்கூடாது என்று கோருகின்ற ஆவணத்தில் கையொப்பமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின்போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் முக்கிய இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்துவருகின்ற நிலையில், அரசாங்கம் அந்த நிலைப்பாட்டை எடுத்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி தாங்களும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அமைச்சர் முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் கூறினார்.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விமல் வீரவங்ஸ தரப்புடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறுகிறார்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எவரும் அவ்வாறான தகவலை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யவில்லை.
விமல் வீரவங்ச தரப்புடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்கக்கூடாது என்பதே தமது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறினார்.
தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி விமல் வீரவங்ஸ தரப்பினருடன் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
13-ம் திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு தொடர்ந்தும் அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை விமல் வீரவங்ஸ தரப்பினருக்கு தாம் விளக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்குள் இதுதொடர்பில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள் காரணமாக, 13-ம் திருத்தம் நீக்கப்பட்டுவிடும் என்று எவரும் அஞ்சத்தேவையில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.bbc
Aucun commentaire:
Enregistrer un commentaire