mercredi 5 décembre 2012

இலவச லேப்டாப்கள் மாணவர்களுக்கு : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்ஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அதன் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
அகமதாபாத்தில் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள், டேப்லெஸ்ட் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கட்டணம் குறைக்கப்படும். சிறுபான்மை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான சச்சார் கமிட்டி அறிக்கையின்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- சிறிய மற்றும் பெரிய அளவில் கூடுதலாக அணைகள் கட்டப்படும். விவசாயிகளுக்கான உரங்கள் மீதான வாட் வரி ரத்து செய்யப்படும். சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.
- டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு மிகக் குறைவான விலைக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபப்டுத்தப்படும்.
- புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
- பின் தங்கிய பகுதிகளில் சிறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு 85 விழுக்காட்டு தொழிலாளர்களாக உள்ளூர்மக்களே பணி அமர்த்தப்படுவர்.
- வறட்சி பாதித்த கட்ச், செளராஷ்டிரா பகுதி விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் வரும் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire