samedi 8 décembre 2012

இந்த அரசும்;, அதன் பயங்கரவாதமும் வெறுமனே தமிழருக்கு மட்டும் எதிரானதல்ல


இந்த அரசும்;, அதன் பயங்கரவாதமும் வெறுமனே தமிழருக்கு மட்டும் எதிரானதல்ல. அது சிங்கள மக்களுக்குக் கூட எதிரானது. முள்ளிவாய்க்காலின் பின், அரச பயங்கரவாதத்தை சிங்கள மக்கள் வெளிப்படையாக இன்று எதிர்கொள்வதும், அதை தமிழ் மக்கள் உணரக் கூடியதாகவும,; காணக் கூடியதாகவும் உள்ளது. அரச பயங்கரவாதம் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்ற, அறிவும் தெளிவும் தமிழ்மக்களுக்கு அவசியமானது. இது எமது கடந்தகால யுத்த தந்திரத்தையே, முற்றிலும் மாற்றி அமைக்கக் கோருகின்றது.
அரசு, அரச பயங்கரவாதத்தை தமிழ்மக்கள் மேல் ஏவும் போது, அரசு தனக்கு எதிராக சிங்கள மக்கள் இருக்காத வண்ணம் வைத்திருக்க முனைகின்றது. இதன் மூலம் தான் அரச பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தமிழ்மக்கள் மேல் தொடர்ந்து திணிக்கின்றது. நாம் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் தான், அரச பயங்கரவாதத்தை  தமிழ்மக்கள் மேல் ஏவுவதற்கு எதிராக சிங்களமக்களைக் கொண்டுவரமுடியும்;.
இதை இலகுவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முள்ளிவாய்க்காலில் அரசு படுகொலையைச் செய்ய முன்னர், படுகொலையை நடத்துவதற்குரிய வண்ணம் இந்தியா முதல் கொண்டு அனைத்துலக வெளித்தடைகளும் தமக்கு வராத வண்ணம் தன் யுத்த தந்திரத்தை உருவாக்கி இருந்தது. இது போல்தான் அரச பயங்கரவாதத்தை நாம் எதிர்கொள்வதற்குரிய வண்ணம், எமது யுத்ததந்திரத்தை முன்னெடுக்க வேண்டும்;.
இன்று தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தையும், போராடும் பிரிவுகள் மீதான வன்முறையையும் எதிர்கொள்வது எப்படி? இதுதான் எம்முன்னுள்ள எதார்த்தமான கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை காண்பதும், அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலமும் தான் இதற்கு தீர்வு காண முடியும். இந்த வகையில்
1.அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் மக்கள் தான், இதை எதிர்த்துப் போராட வேண்டும்;. இதுவே முதலாவது அடிப்படையான நிபந்தனை. இந்த மக்களுக்காக யாரும் போராடவும், வெளியில் இருந்து ஒரு தீர்வை யாரும் தரவும் முடியாது. தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள்.. தனித்துப் போராடுவதன் மூலம் தீர்வு காணமுடியாது. மக்கள் போராட்டத்தின் உள் தான் இவை இருக்கவும், இயங்கவும் முடியும். மக்கள் அல்லாத எந்தச் சக்தியையும் நம்பி, இந்த அரச பயங்கரவாதத்தை முறியடிக்கும் நம்பிக்கைகள் எவையும் அறிவு பூர்வமானதல்ல. ஏன், எமது கடந்தகால தோல்விகள் அனைத்தும் இது சார்ந்தவை தான்.
2.அரசு தன் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி தன் பின் அணிதிரட்டும் அரசியல் சூழலை தடுத்து நிறுத்த வேண்டும்;, அதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்;. யாரை அரசு தன் பின் திரட்டுகின்றதோ, அங்கு குறிவைத்தும் நாம் செயலாற்ற வேண்டும்;. இந்த வகையில்
2.1.அரச பயங்கரவாதம் தன்னை நியாயப்படுத்தக் கூடிய வகையில், மக்களில் இருந்து அன்னியமான எந்தச் செயல்களிலும் நாம் தனிநபர்களாகவோ, குழுக்களாகவோ ஈடுபடக் கூடாது. மக்களிலிருந்து அந்நியமானவற்றை நாம் கண்டிக்கவும், அதை எதிர்த்துப் போhராடவும் வேண்டும்.
2.2.அரசு இனரீதியாக தமிழ் மக்களை எதிரியாகக் காட்டி தன்பின் அணிதிரட்டும் சிங்கள மக்களை, எமது நியாயமான உரிமைகளைச் சார்ந்து எமக்கு சார்பாக அவர்களை வென்றெடுக்க வேண்டும். இந்த வகையில் சிங்கள மக்களுடன் நாம் உரையாடுவதில் தொடங்கி, எம் நியாயமான உரிமைகளை அவர்கள் ஊடாக முன்னிலைப்படுத்த வேண்டும்;.
3.உலக நாட்டுத் தலைவர்களை, சிங்கள தலைவர்களை, தமிழ் தலைவர்களை… நம்புவதை விட்டு, மக்களைச் சார்ந்து செயல்படுதலையே எமது அரசியலாகக் கொள்ளவேண்டும். இந்த வகையில் கருத்துகளை முன்னிலைப்படுத்தி, மக்களை அணிதிரட்டுவதே அரச பயங்கரவாதத்துக்கு எதிரான எமது செயலாக மாறவேண்டும். எமது மக்களை நம்பி, அவர்கள் வழிகாட்டுதலை பெறும்வண்ணம் எம்மை நாம் முன்மாதிரியாகக் கொண்டு நாம் எம்மை அணிதிரட்ட வேண்டும்;.
இவ்வாறான வழிகளில் நாம் அரச பயங்கரவாதத்தை இன்று எதிர்கொள்ளவில்லை. இந்த எதார்த்த சூழலில் தான், அரச பயங்கரவாதம் தன் வன்முறையை இலகுவாக ஒரு சமூகம் மீது ஏவுகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்துவதும், இறுதியில் மாணவ தலைவர்களை குறிவைத்தும் தாக்குகின்றது. இதன் சாரம், வன்முறையை இலகுவாக ஏவும் வண்ணம், எம் சமூகம் தனித்துக் குறுகி நிற்கின்றது. இதை மாணவர் தலைவர்களுடான எமது உரையாடல் மட்டுமன்றி, இலங்கை அரசியல் எதார்த்தமும் எமக்கு தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.
தனிநபர்களை மிரட்டுவது, அவர்கள் மேல் வன்முறையை ஏவுவது, இறுதியில் கொல்வதன் மூலம், தம் மீதான எதிர்ப்பை இல்லாததாக்க முடியும் என்பதை மக்களிலிருந்து அன்னியமான அரசியல் எதார்த்தம் எடுத்துக் காட்டுகின்றது. அரச பயங்கரவாதத்தின் நடைமுறை இதையே தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துகின்றது.
அரசு முள்ளிவாய்க்காலிலும் சிங்கள ஊடகவியலாளர் மீதான வன்முறையிலும் இந்த வழிமுறையைத்தான் கையாண்டது, கையாளுகின்றது. மக்களில்; இருந்து அன்னியமான, மக்களின் சொந்த செயல்பாடு மூலம் அல்லாத எதையும், அரச பயங்கரவாதம் தனிநபர்களை கொல்வதன் மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுதான் எம்முன்னுள்ள எதார்த்தம் மட்டுமல்ல, எமது கடந்கால அனுபவமும் கூட. இதை நாம் நிராகரிக்கக் கூடாது. உணர்ச்சிகளும், உணர்ச்சி வசப்படலும் எமக்கு தூக்குக்கயிறாக மாறக் கூடாது. மாறாக அறிவுபூர்வமாக, இதை உடனடியாக அணுகியாக வேண்டும். இந்த வகையில் இன்று
1.யாழ் பல்கலைக்கழகம் என்ற நிறுவன அமைப்பைச் சார்ந்து இருக்காது, மாணவர்களை  அணிதிரட்டி அமைப்பாக்க வேண்டும்.
2.யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ள, சகல மாணவர்களை அணிதிரட்டும் வண்ணம் மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
3.மாணவர்கள் தம்மை மக்களுடன் ஒருங்கிணைக்கும் வண்ணம், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியமானது.
4.சிங்கள மக்களுடன் உறவுகள், உரையாடல்கள் முதல் கொண்டு எமது உரிமைகளை ஏற்க  வைப்பதில் உள்ள பரஸ்பர அவநம்பிக்கைளை முதலில் நாம் எம்மில் களைந்தபடி, அதை முன்னெடுக்க வேண்டும். இந்த வகையில்
4.1.யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள் மாணவர்களுடன், முழுமையான ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். எமது குறுகிய தமிழ் அடையாளத்தை துறந்து அவர்களுடன் மாணவர்கள், மக்கள் என்ற அடிப்படையில் எம்மை நாம் முன்னிலைப்படுத்தி இணைய வேண்டும்.
4.2.யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவராக சந்திக்கும் பிரச்சனைகளுக்;கு முன்னின்று தமிழ் மாணவர்கள் போராட வேண்டும். அவர்கள் தமக்காக தம் உரிமைக்காக போராடும் தனித்துவமான சூழலுக்குரிய நிலை உருவாகாத வண்ணம், அவர்களுக்காக தமிழ் மாணவர்கள போராட வேண்டும்.
4.3.வெறும் தமிழர் பிரச்சனைக்குள் முடங்கிவிடாமல், இலங்கையின் அனைத்து மாணவர்கள் நலனை மையப்படுத்தி குரல் கொடுக்கவேண்டும்;. மாணவ சமூகத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, சிங்கள மாணவர்களுடன் இணைந்து குரல் கொடுக்கவேண்டும்.
4.4.மாணவர்கள் நலன் சார்ந்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயலுக்கு முன் வரவேண்டும். இந்த வகையில் யாழ்பல்கலைகழகமும் முன்னின்று செயலாற்ற வேண்டும்.
4.5.இலங்கை வாழ் மக்களின் அனைத்துப் பிரச்சனை மீதும், மாணவர்கள் இனம் கடந்து தம் அக்கறையை செலுத்த வேண்டும்.
இந்த வகையில் அரச பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்கொள்ளவும், அதை  முறியடிக்கவும் முடியும்.
அந்த வகையில்
அரச பயங்கரவாதத்தை இனம் காண்போம்! அதை முறியடிக்க அனைவரும் ஒருங்கிணைவோம்!!
மாணவர் நலன் சார்ந்து கோரிக்கைகளை இனம் காண்போம்! அதற்காக இனம் கடந்து போராடுவோம்!!
மக்கள் போராட்டங்களை அடையாளம் காண்;போம்! அதில் இனம் கடந்து ஒருங்கிணைவோம்!!
தனிமை வாதத்துக்கும், குறுகிய வாதத்தையும் இனம் காண்போம்! அதற்கு எதிராக எம்மை நாம் ஒருங்கிணைப்போம்;!!
தமிழனாக மட்டும் எம்மை இனம் காண்பதை நிறுத்துவோம்! ஒரு மனிதனாக, சமூக உயிரியாக எம்மை அடையாளப்படுத்துவோம்!!
இனவொடுக்குமுறையை மட்டும் எதிர்த்துப் போராடுவதை நிறுத்துவோம்! அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!!

Aucun commentaire:

Enregistrer un commentaire