mardi 5 mars 2013

30 நாடுகள் ஆதரவு? இந்திய அரசு இன்னமும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தனது தீர்மானத்தை இன்று தாக்கல் செய்யவுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.

இலங்கை இறுதிப் போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தது. 
இந்தியா உட்பட பெரும்பான்மையான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இந்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. 

இன்று தாக்கல் ஆகும் இத் தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், 
போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தப்பட இருக்கிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கின்றன. இந்திய அரசு இன்னமும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்றும் அந்தச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire