mardi 19 mars 2013

இன விரிசலை ஏற்படுத்த ஜெயலலிதா, கருணாநிதி முயற்சி;விமல் வீரவன்ச


Wemalஇலங்கையில் மீண்டும் இனப்பகையை ஏற்படுத்தி தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குதள்ள தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவும், கருணாநிதியும் முயற்சிப்பதாக நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் எவ்வித வேறு பாடுகளின்றி ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பிரச்சினை உள்ளது என கூறி தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் குளிர்காய முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
மாத்தளை ரோஸ்வத்தையில் 38 பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த வைபவத்தில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அநுர திசாநாயக்க, அம்பகன்கஹ பிரதேச சபையின் உப தலைவர் நாகப்பன் யோகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச் காணியும் வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக 2 இலட்சம் ரூபா நிதியும் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 3 ஏக்கர் நிலம் 38 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்துக் கோவில் மற்றும் பாதை நீர் வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு மேலும் உரையாற்றுகையில்
இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் ஈழ நாடு தேவையென்றால் அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற பிரதேசத்தை கொண்ட தனியானதொரு தமிழ்ஈழ நாடு உருவாக வேண்டும். அங்குதான் உலகில் உள்ள தமிழ் மக்களது பாரம்பரியம், இந்து மத வரலாறு, கலை, கலாசாரம் மொழிகள் கொண்டதொரு தமிழ் மாநிலங்களாகும். இதற்காகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் முதலில் தமக்கென ஒரு தமிழ்ஈழத்தை உருவாக்க போராட வேண்டும். இதற்குத் தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவிலும் ஐக்கிய நாட்டுச் சபையிலும் போராட வேண்டும்.
இந்தியாவில் இதனைச் செய்ய முடியாமல் இலங்கையில் ஒரு தமிழ்ஈழம் உருவாவதற்கு அவர்கள் குரல்கொடுப்பது ஒரு கோழைத்தனமானதொரு செயலாகும். இலங்கையில் மீண்டும் ஒரு தமிழ் ஈழம் உருவாக நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இங்கு எனக்கு முன் உரையாற்றிய அம்பகன் பிரதேச உப தலைவர் நாகப்பன் யோகராஜ் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் ஊடகங்களில் விமல் வீரவன்சவா?
அவர் ஒரு ஜே.வி.பி. அடிப்படைவாதி; அவர் ஒரு இனவாதி என சித்தரிக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விமல்; என்னை இந்த நாட்டில் உள்ள தமிழ் செய்திப் பத்திரிகைகள் ஒரு இனவாதியாக நாளாந்தம் எழுதித் தள்ளுகின்றனர்.இந்தப் பத்திரிகைச் சொந்தக்காரர்கள் செயல்படுவதும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அல்லது தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர்
இரா. சம்பந்தன் அல்லது சுமந்திரன் ஆகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப என்னை ஓர் இனவாதியாக சித்தரிக்கின்றனர். அப்படியென்றால் முழு நாட்டுக்கும் நான் எப்படியானவன் என்று இன்று இங்கு நடைபெறும் நிகழ்வு சான்றுபகரும். இன்று 38 தமிழ் குடும்பங்களுக்கும் காணித்துண்டுகளும், வீடுகள், ஹிந்து கோவில், மின்சார வசதிகள் கொண்ட ஒரு தமிழ் கிராம மொன்றை உருவாக்கும் விமல் வீரவன்ச ஒரு இனவாதியா ? நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விமர்சித்தால் நான் ஒரு இனவாதியா? என கேள்வி எழுப்பினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire