dimanche 24 mars 2013

கருணா தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது!- அமைச்சர் ராஜித

கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாடிக்கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரதிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது:
ஆனையிறவு சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை கருணாவே ஈட்டிக் கொடுத்தார். இதுபோன்று புலிகளின் பல வெற்றிகளுக்கு அவர் காரணமாக அமைந்தார்.
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது கருணா ஹெலிகொப்டரில் அங்கு சென்று பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.
டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்து போதும், 1994ம் ஆண்டிலும் கிழக்கை படையினரால் மீட்கப்பட்டிருந்த போதிலும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகல பிரதேசம் படையினரால் மீட்கப்படவில்லை.
அங்கு படையினரால் நுழைய முடியவில்லை.
ஆனால் கருணா அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அவர் வழங்கிய தகவலின் மூலமே தொப்பிகலவை படையினரால் மீட்க முடிந்தது.
யுத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்ட கருணா நாடாளுமன்றத்தில் இருக்கிறார். ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட சரத் பொன்சேகா சிறையில் இருக்கிறார் என்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் குரலெழுப்பினர்.
கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திருக்காவிட்டால் இவ்வளவு விரைவாக யுத்தத்தை முடித்திருக்க முடியாது என்று அவர்களுக்கு நான் பதிலளித்தேன்.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்டதாகவும் அவரை கொழும்புக்கு அழைத்து வந்திருப்பதாகவும், அவரை உங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் இங்கு சமுகமளித்துள்ள அலிசாஹிர் மௌலானா எனக்கு தொலைபேசியில் கூறியிருந்தார்.
அவ்வாறு கருணாவை எமது வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம் என்றும், அழைத்துவந்தால் நான் கொழும்பில் இருக்க முடியாது என்றும் கூறிய நான் நீங்களும் கவனமாக இருங்கள் என்று மௌலானாவுக்கு சொன்னேன்.
ஆனால் கருணா நாடாளுமன்றத்துக்கு வந்தார். அலிசாஹிர் மௌலானா அமெரிக்காவுக்கு ஓடினார்.
நான் பின்னர் ஒருமுறை அமெரிக்கா சென்றபோது மௌலானாவை சந்தித்து மேற்படி உரையாடிய சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

Aucun commentaire:

Enregistrer un commentaire