samedi 23 mars 2013

இந்தியாவின் ஒத்துழைப்போடே சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்பட முடியும் ;ராபர்ட் பிளேக்

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட் பிளேக் பிபிசிக்கு அளித்த பிரத்தியேகச் செவ்வியில் தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய இந்தியாவின் ஒத்துழைப்போடே சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்பட முடியும் என்றும் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய தீவிரப் போக்கை குறைப்பதில் இந்தியா பங்காற்றியதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் அமெரிக்க இராஜதந்திரி ராபர்ட் பிளேக் நிராகரித்தார்.
அமெரிக்கத் தீர்மானத்தின் தீவிரத்தன்மை குறைக்கப்படவில்லை என்றும் தீர்மானம் நியாயமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் தான் இருந்தது என்றும் மீள்-இணக்கம் மற்றும் பொறுப்புகூறல் விடயங்களில் இலங்கை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது என்றும் ராபர்ட் பிளேக் பிபிசியிடம் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire