samedi 23 mars 2013

‘ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு புஷ்வானம்’

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை முகத்தை கண்டுகொண்டோமேயொழிய அந்த தீர்மானத்தின் மூலமாக தமிழ் மக்கள் எவ்வித பிரயோஜனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதுதான் உண்மையாகும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
அமெரிக்காவை நம்பியதன் மூலமாக இந்நாநாட்டின் வாழும் தமிழ் மக்கள் மீது இன்னுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியதுதான் மிச்சமாகும். அதற்கு துணை போன தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளானர்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தானே தமிழ் மக்களுக்கு தலைவன் என்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் கூறிக்கொள்பவர்கள் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை வளர்த்துவிட்டார்களே யொழிய ஜெனீவா தீர்மானம் மூலமாக எதனையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் தமது வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே அமெரிக்காவின் பிரேரனைக்கு பின்புலமாக இருந்து அவர்கள் செயல்பட்டார்கள். இன்று அமெரிக்கா தனது முதலாளித்துவ சர்வதிகார நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
பிரித்து ஆள்வதற்கான நாடகம்
இலங்கையை சீனாவிடமிருந்து பிரித்து ஆள்வதற்கான நாடகமே இதுவாகும். அமெரிக்காவை போன்ற சர்வதேசத்தை நம்பி விடுதலைப்புலிகள் மட்டுமின்றி தமிழ் தலைமைகளும் இன்று சோரம் போய்விட்டனர். இரா. சம்பந்தன் முதல் ஜெனிவாவை நம்பியிருந்த அனைத்து தமிழ் தலைவர்களும் இன்று தென்னிலங்கையில் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் நிலவியிருக்கும் அசாதாரண நிலைமைக்கு பதில் சொல்ல வேண்டும்.
இனக்கலவரத்தை சம்பந்தன்  தடுத்து நிறுத்துவாரா?
தமிழ் நாட்டில் நிலவிவரும் இலங்கைக்கான போராட்டங்களை வரவேற்றிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அதன் மூலமாக தென்னிலங்கையில் இனக்கலவரம் ஏற்படுமாயின் அதனை தடுத்து நிறுத்துவாரா?
உயிருடன் விளையாட தயாரில்லை
இறந்து போன உறவுகளுக்காக நாம் மிகவும் மனக்கஷ;டத்தை அனுபவிக்கின்றோம். அவர்களது உறவினர்களின் வேதனையை உணர்கின்றோம்;. ஆனால் இழந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்களின் உயிருடன் விளையாட தயாராக இல்லை.
இந்நாட்டில் வாழும் தமிழர்களை வெறும் அரசியலுக்காக அடகு வைப்பது நியாயமானதல்ல. தமிழ் நாட்டில் இன்று எமக்காக நடக்கும் போராட்டங்களை மதிக்கின்றோம். ஆனால் அரசியல் ஆதாயம் தேடி தமது செல்வாக்கை பெருக்கிக் கொள்ளும் ஒரு சிலரின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
முள்ளிவாய்க்காலும் கருணாநிதியும்
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது போராட்டங்களை முன்னெடுக்காத கருணாநிதி போன்ற தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் இன்றைய போராட்டம் மேலும் ஒரு முள்ளிவாய்க்கால் அவலத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு துணை போகும் தமிழ் தேசியம் பேசும் இலங்கை அரசியல்வாதிகள் இனக்கலவரம் ஏற்படுமாயின் விலாசத்தை தொலைத்து ஒளிந்துவிடுவார்கள் என்பதே உண்மை என தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு நான் வெள்ளையடிக்கவில்லை

இலங்கை அரசாங்கத்திற்கு நான் வெள்ளையடிக்க விரும்பவில்லை. யுத்தத்திற்கு பின்னராக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் தீவிரப்படுத்தவில்லை என்பது உண்மையாகும். முள்ளிவாய்க்கால் அவலங்கள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
எமது அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் தமிழ் நாட்டிலும் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அரசாங்கம் சர்வதேச அரசியல் ரீதியில் முகங்கொடுக்க தயாராக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள மக்களின் ஆதரவு அதிகரிக்கும்
அளவுக்கு அதிகமான அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு சர்வதேச எதிர்ப்பு போராட்டங்களின் மூலமாக சிங்கள மக்களின் ஆதரவை மென்மேலும் அரசாங்கம் பெற்றுக் கொள்ளகின்றது. தமிழ் தேசியம் பேசுபவர்கள் இதற்கு துணைபோகின்றார்கள். தமிழ் நாட்டில் இடம்பெறும் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் அரசாங்கத்தை மென்மேலும் வலுப்படுத்துகின்றதேயொழிய இனப்பிரச்சினைக்கான தீர்வை மழுங்கடித்துவிடுகின்றது. சர்வதேசத்தை நம்பி பிரபாகரனின் போராட்டம் வீழ்ச்சியடைந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன்றைய நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதே வல்லரசு நாடுகள் இன்று தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதை போன்று நடித்தாலும் நாளை இவர்கள் தமது நலனுக்காக தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவும் தயங்கமாட்டார்கள்.
ஆகவே இவர்களை விட இந்திய நாட்டின் உதவியுடன் எமது அரசாங்கத்துடன் பேசி எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளக்கூடிய வழிவகைகளை  செய்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire