lundi 11 mars 2013

பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என் அனுபவத்தை கேட்டிருந்தால்

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள்  இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர்.  எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;.
 
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவையில்லை எனவும் அவர் கூறினார்.  

நான் பதவிக்காக அலைபவன் அல்ல. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள்  இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர்.  கூட்டமைப்பாக பதிவு செய்ய நினைப்பவர்கள் என்னைப் பற்றி யோசித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் தேவையில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் என்று கூறுவதை தவிர வேறொன்றையும் என்னால் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரனும் உயிருடன் இருந்திருப்பார். நாற்பதனாயிரம் மக்களும் உயிருடன் இருந்திருப்பர். அது மட்டுமன்றி  கோடிக்கணக்கான பொருட்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.  ஆனால், புலிகளை தூக்கி வைத்து அவர்களது ஆதரவாளர்களை தூக்கி வைத்து நாட்டையும் இனத்தையும் அழித்து இளம் துளிர்களை கிள்ளி எறிந்து ஒழித்துவிட்டு இன்று வீரம் பேசுபவன் நான் அல்ல.  3 இலட்சம் மக்களின் சாபத்திற்கு ஆளாகப்போகின்றீர் என நான் அன்றே பிரபாகரனுக்கு கூறினேன். ஆனால் பிரபாகரன் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

4 கட்சிகள் இணைந்து பதிவு செய்தால் ஆதரவளிப்பீர்களா எனக் கேட்டபோது,

'நான் இவர்களை பதியுமாறும் கேட்கவில்லை பதிய வேண்டாம் எனவும் கூறவில்லை. எனக்கு பதவி தேவையில்லை. நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயற்பட்ட கட்சி தலைவர்களுடன் அரசியல் நடத்தியவன் நான். சில்லறைத்தனமாக நான் அரசியல் நடத்தவில்லை. அவ்வாறான அரசியலை நடத்தவும் மாட்டேன்' எனக் கூறினார். 

மக்களின் விருப்பப்படி நான் செயற்படுவேன். அதனை விடுத்து மரத்துக்கு மரம் பாயும் குரங்குபோல் என்னால் செயற்படமுடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire