mardi 12 mars 2013

காணி அலுவலகங்கள் திறப்பு வட இலங்கையில்


போருக்குப் பிந்திய வட இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள காணி பிரச்சினைகளுக்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய நகரங்களில் அரசாங்கத்தினால் விசேட காணி அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு நாள் விஜயமாக வடபகுதிக்குச் சென்றிருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இந்த அலுவலகங்களைத் திறந்து வைத்திருக்கின்றார்.

யாழ் மாவட்டத்தின் காணி பிரச்சினைகளை யாழ் காணி அலுவலகமும், கிளிநொசசி, முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளை கிளிநொச்சி காணி அலுவலகமும் கையாளும் வகையில் இந்த அலுவலகங்களுக்கென புதிய ஆளணியினரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

தேவைக்கேற்ப பொதுமக்களுக்கும் மற்றும் அரச தேவைகளுக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் அந்தந்தப் பிரதேசங்களி;ன் பிரதேச செயலாளர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. எனினும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் திறக்கப்பட்டுள்ள விசேட அலுவலகங்களில் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகளுக்கு காணிகளை சுவீகரிக்கும் அதிகாரம் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் காலப்பகுதியில் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், அதன் பின்னர் மீண்டும் காணி அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி பிரச்சினைகளுக்கு, இன மத பேதமின்றி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் சிங்களவர்களின் காணிகள், தமிழர்களின் காணிகள், முஸ்லிம்களின் காணிகள் என்று காணிகள் கிடையாது. இலங்கையர்களின் காணிகளே இங்கு இருக்கின்றன. என்றாலும் அனைத்து இன மக்களுக்கும் காணிகளுக்கான உரிமை இருக்கின்றது. இதனை உணர்ந்துதான் நாங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படுவதற்கு முன்பே காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். இருந்தாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்ததனால் அந்த முயற்சி தடைபட்டுப் போயிற்று என்றார் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, 24 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று மீள்குடியேற முடியாமல் இருக்கின்றார்கள். உணர்வுபூர்வமான பிரச்சினையாக மாறியிருக்கின்ற போதிலும், வலிகாமம் வடக்கு மட்டுமல்ல. வட மாகாணம் எங்கும் காணி பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியிருக்கின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் பொதுமக்களின் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள் என்று பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றது. வடக்கு கிழக்கு மட்டுமல்ல. நாட்டின் எல்லா இடங்களிலும் அரசுக்குத் தேவையான இடங்களில் காணிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் 5000 ஏக்கர் காணிகளை படையினர் திருப்பி ஒப்படைத்திருக்கின்றார்கள். அதேபோன்று வலிகாமம் வடக்கு பிரதேச காணிகளும் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றார் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள்.

'படையினர் ஆக்ரமிப்பு குறித்து முடிவு இல்லை'-- ஈபிடிபி


இதேவேளை, வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் காணிகளில் கம்பி வேலிகள் அமைத்து படையினர் நிலைகொண்டுள்ள பிரதேசம் தொடர்பில் எந்தவிதமான இநுதி முடிவுகளும் இன்னும் எடுக்கப்படவில்லை என இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ஈபிடிபி கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கூறினார்.

இது தொடர்பாக அந்த மக்களுமைடய அபிப்பிராயங்களும் இன்னும் பெறப்படவில்லை. இராணுவம் நீண்டகாலத்தி;ற்கு நிலை கொண்டிருப்பதற்காக காணிகளைக் கோருகின்றார்கள். அவற்றில் அரச காணிகள், தனியார் காணிகள், அரச தேவைக்கென ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளுராட்சி சபைகளுக்கான காணிகள் என பலதரப்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை சுவீகரிப்பதென்றால் அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இருந்தாலும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தின் தேவைக்கோ அல்லது அபிவிருத்தித் தேவைக்கோ எடுக்கப்பட முடியாது என்பதை காணி அமைச்சருக்கு நாங்கள் திட்டவட்டமாக எடுத்துரைத்திருக்கின்றோம். அவரும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire