dimanche 2 mars 2014

கொன்று போட்ட கொடூரம் .இவர்களுக்கு என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? : துக்ளக்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற மூன்று பேர்களின் தண்டcho thuklakனையை, ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்திருக்கிறது; அத்துடன் ‘அவர்களுடைய விடுதலையைப் பற்றி உரிய அரசு முடிவு எடுக்கலாம்’ என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது. 

தமிழக அரசு அடுத்த தினமே, ‘இந்த மூவர் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நால்வர், விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று முடிவு எடுத்தது. இந்த மாதிரி முடிவு (ஸி.பி.ஐ. விசாரித்த வழக்கு அது) மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 

தமிழக அரசு, தனது முடிவை மத்திய அரசுக்குத் தெரிவித்து, ‘மூன்று நாட்களில் உங்கள் கருத்து எங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்; இல்லையெனில் இந்த விடுதலைகள் நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளது. 

நமக்கு ஒரு சந்தேகம் வரத் தொடங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு, அதன் பிறகு மறு பரிசீலனை மனுவும் நிராகரிக்கப்பட்டால் – அந்த நிலையில் கைதிக்கு இருக்கும் வழி – ஜனாதிபதியிடம் (கவர்னரிடம்) கருணை மனு சமர்ப்பிப்பதுதான். ‘அந்தக் கருணை மனு மீது முடிவு எடுக்க, நீண்ட தாமதம் நேரிட்டால் கூட, அந்த விஷயத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இருக்கிறதா?’ என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது. 

‘சுப்ரீம் கோர்ட்டின் மறு பரிசீலனையும் முடிந்து தண்டனை உறுதியாகிய நிலையில், ஜனாதிபதிக்குக் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்ட பின், நீதிமன்றத்திற்கு இதில் வேலை கிடையாது – ஜனாதிபதியின் முடிவில் உள்நோக்கமோ, கவனக் குறைவோ இருந்தால் தவிர’ என்று நாம் நினைக்கிறோம். 
அப்படியிருக்க மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் நோட்டீஸ் அனுப்பி, இதை முடித்து வைக்க முனைவதும்; ‘மத்திய அரசு இதை ஏற்றாலும் சரி, ஏற்கா விட்டாலும் சரி – பதில் வராவிட்டாலும், எங்கள் முடிவு நிறைவேற்றப்படும்’ என்று அறிவிப்பதும் எப்படி கலந்தாலோசனை ஆகும்? இது சட்ட ரீதியாகவோ, மற்றபடியோ ஏற்கத்தக்கதாக இல்லை. 

இது ஒருபுறமிருக்க, இந்தக் குற்றவாளிகள் புரிந்த அராஜகம் சாதாரணமானது அல்ல. இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொல்ல மிகவும் வஞ்சனையாகத் திட்டம் தீட்டி, சதி செய்து, அவரையும் அவருடன் எட்டு போலீஸார் மற்றும் ஏழு அப்பாவிகளையும் கொன்று போட்ட கொடூரம் அது. இவர்களுக்கு என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? 

மற்ற கட்சிகள் கோரிக்கை எழுப்பும் முன்னரே இந்த நடவடிக்கையை எடுத்து, அரசியல் ரீதியாக ஒரு சாமர்த்தியமான முடிவை அரசு எடுத்திருக்கிறது – என்று ஒரு அபிப்ராயம் கூறப்படுகிறது. இம்மாதிரியான விஷயத்தில் கூட அரசியல் நோக்கம் புகுவது என்பது, வருத்தத்திற்குரிய விஷயம். 

அப்படி இதில் ஒரு அரசியல் லாபம் இருப்பதாகவும் முடிவு கட்ட முடியாது. இந்த முடிவிற்கு சுமார் பத்து தினங்களுக்கு முன்பு, குற்றவாளி நளினி, தன்னை ஒரு மாதம் பரோலில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியபோது, தமிழக அரசின் சார்பில் அதை எதிர்த்தார்கள். ‘இது முடியாது. இவரை வெளியே விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழும். சிலர் இவரை தங்கள் அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த முனைவார்கள். இவருடைய உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம்’ என்று வாதிடப்பட்டது. 

ஏழு பேரில் ஒருவரை, ஒரு மாதம் வெளியே விடக் கூட சம்மதிக்காத தமிழக அரசு – பத்தே நாட்களில், ஏழு பேருக்குமே விடுதலையையே தந்துவிட முன்வந்தது ஏன்? அரசியல்தான். அரசியல் என்று ஆன பிறகு, அதில் நியாய, அநியாயம் பார்க்க முடியாது. லாப நஷ்டம்தான் பார்க்க வேண்டும். இதில் லாபமும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. ராஜீவ் கொலையாளிகளை தமிழகம் மன்னித்து விட்டதாகக் கருத இடமில்லை. நடந்திருப்பது நல்லதற்கல்ல. 
நன்றி: துக்ளக்

Aucun commentaire:

Enregistrer un commentaire