jeudi 20 mars 2014

இளையராஜாவுக்கு உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒன்பதாவது இடம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இசையமைப்பாளர் இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களையும், திரைப்படக் கலைஞர்களையும் பட்டியலிடும் ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய இதழ் உலகின் சிறந்த 25 சினிமா இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது. சினிமா இசை வரலாற்றில் சாதனை படைத்தவர்களுக்கான இந்த சிறப்புக்குரிய பட்டியலில் இளையராஜாவின் பெயர் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இளையராஜா உள்ளார் என பெருமைப்படுத்தியுள்ள ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’, இதுவரை 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான பாடல்களை வழங்கியுள்ள இவர், பல்வேறு மொழிகளில் 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இளையராஜாவின் பின்னணி இசை சேர்ப்பு திறமை பெரிதும் பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டியதுடன், அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை பல படங்களின் வெற்றியில் பெரும்பங்கு ஆற்றியதாகவும் அந்த இணைய இதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
இசைஞானியின் அங்கீகாரத்துடன் வரும் ஏப்ரல் 5ம் தேதி அன்று மதுரையில் இளையராஜா ரசிகர் மன்றமும், “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது என்ற தித்திக்கும் செய்தி வெளியாகியுள்ள வேளையில், தேனினும் இனிய இந்த தெவிட்டாத நற்செய்தியும் இணைகையில், அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire