jeudi 6 mars 2014

மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே;சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே ஆபத்து ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, 

வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கே அரசாங்கம் ஜெனிவா அமர்வை பயன்படுத்த முனைகிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தம்மை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 

அதெல்லாம் முட்டாள்தனம். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, எவரையேனும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முயற்சித்தால், போரில் முன்னணியில் நின்ற ஜெனரல்களையே முதலில் கொண்டு செல்லும். 

போர் முனையில் நடந்த எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் முதல் பொறுப்பாளிகளே தவிர, கொழும்பில் அமர்ந்து கொண்டிருந்த அரசியல்வாதிகளல்ல. 

எனவே போர்க்குற்றச்சாட்டுகளுக்காக எவரேனும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லப்படுவார்களேயானால், முதல் ஆள் நானாகவே இருப்பேன். 

ஏனென்றால், நாளே போருக்குத் தலைமை தாங்கினேன், நானே திட்டமிட்டேன், நானே கண்காணித்தேன், நானே வழிநடத்தினேன், நானே போர்முனைச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தேன், நானே உத்தரவுகளை வழங்கினேன். 

எனவே அதுபற்றி நாம் தான் அவர்களை விட அதிகமாக ககுரல் எழுப்ப வேண்டும். 

ஆனால், இவர்கள் இந்த சூழலை வைத்து அரசியல் நலனை அடைய முனைகிறார்கள். 

எவ்வாறாயினும், இந்த எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்தது சிறிலங்கா அதிபரால் தான். 

போர் முடிந்து இரண்டு வாரங்களில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், சிறிலங்கா அதிபர் செய்து கொண்ட உடன்பாட்டில், போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அது குறித்து விசாரித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக கூறியிருந்தார். 

இதனால் தான் விசாரணை செய்யுமாறு அவருக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்கிறது. 

அவர் ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். அதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் சிறிலங்கா அதிபரின் நெருங்கிய நண்பர்,  அவரது வலது கரம். 

இப்போதைய எல்லா பிரச்சினைகளையும் தோற்றுவித்தவர் சிறிலங்கா அதிபரே. 

இப்போது அவர் தமது அரசியல் நலனுக்காக, ஏனைய கட்சிகளே விசாரணையை வலியுறுத்துவதாக கூறுகிறார். 

இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், எவருக்கு முன்பாகவும், எங்கேனும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். 

இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்பதை என்னால் ஏற்க முடியாது. அதை நான் நிராக்கரிக்கிறேன். 

குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டை அல்லது நம்பகமான ஆதாரத்தை முன்வைத்தால், கடந்தகாலத்தில் செய்ததைப் போலவே விசாரணை செய்ய முடியும். 

ஆனால் அடிப்படையின்றி இராணுவத்தை இழிவுபடுத்த முடியாது. 

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் தேவையில்லை. 

இந்த நாட்டினாலேயே சொந்தமாக அதைச் செய்ய முடியும். 

ஆனால் அரசாங்கம் அதைச் செய்யத் தவறினால், அனைத்துலக சமூகம் அமைதியாக இருக்காது. இது தான் பிரச்சினை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire