lundi 3 mars 2014

இன்று ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி சமந்தா பவர் ஜெனிவாவில் உரை

 இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில், உரையாற்றவுள்ள ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சமந்தா பவர், சிறிலங்கா தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இன்று ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்கா விவிகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நாளை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 

அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறவுள்ளன. 

இதில் அமெரிக்கா சார்பில், ஐ.நாவுக்கான தூதுவரான சமந்தா பவர் உரையாற்றவுள்ளார். 

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் முன்வைக்கவுள்ளதால், சமந்தா பவரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒபாமா அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், சமந்தா பவர் தமது உரையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே அவர், கடந்த 27ம் நாள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனநாயக ஆட்சிமுறைக்கும், மனிதஉரிமைகளுக்கும் சிறிலங்கா மதிப்பளிக்க வேண்டும் என்றும், மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்புக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை நிகழ்ச்சி நிரலில், இடம்பெற்றிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், கனேகடிய வெளிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்குப் பதிலாக, பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்துக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைரும், கனேடிய வெளிவிவகார இணைய அமைச்சர் லைன் யெலிச்சும் நாளைய கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire