dimanche 26 mai 2013

ஒரே நாளில் 293 பேர் பலி வெய்யில் கொடூரத்தால் ஆந்திராவில்

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள். அதிக எண்ணிக்கையாக கிருஷ்ணா மாவட்டத்தில் 33 பேரும், பிரகாசம் மாவட்டத்தில் 32 பேரும், கரீம் நகரில் 29 பேரும், நல்கொண்டாவில் 27 பேரும், குண்டூரில் 26 பேரும், விசாகப்பட்டினத்தில் 16 பேரும், கம்மம் மாவட்டத்தில் 23 பேரும், வரங்கலில் 20 பேரும் பலியாகி உள்ளனர். இது தவிர கிழக்கு கோதாவரியில் 17 பேரும், மேற்கு கோதாவரியில் 11 பேரும் பலியாகி உள்ளனர்.
ஏராளமானோர் சன்ஸ் டோக் வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வாட்டி வதைக்கும் வெயிலில் மனிதர்களே பலியாகும் நிலையில் வன உயிரினங்கள், கால்நடைகள் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 6 1/2 வயது கர்ப்பிணி வெள்ளைப்புலி பரிதாபமாக இறந்தது.
அந்த புலி கருவுற்று இருந்ததால் அதனை குளுமையான இடத்தில் வைத்து பூங்கா ஊழியர்கள் பராரித்து வந்தனர். ஆனாலும் அந்த புலி பரிதாபமாக இறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உள்ள குட்டிகளை காப்பாற்ற கால்நடை டாக்டர்கள் முயன்றும் முடியாமல் போனது.
புலியின் வயிற்றில் இருந்த 4 குட்டிகளும் இறந்து போனது. வெயில் கொடுமைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நேற்று வரை 84 பேர் வெயில் கொடுமைக்கு பலியாகி இருப்பதாக பிரேத பரிசோதனை மூலம் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேர் பலியானதாக வருவாய் துறை மந்திரி ரகுவீர ரெட்டி அறிவித்து உள்ளார். அனல் காற்றுடன் வெப்ப நிலை இன்னும் 1 வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதால் பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதற்கு ஏற்றார்போல் நிலக்கரி சுரங்கம், மின் துறை மற்றும் ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களின் மணி நேரங்கள் மாற்றி அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire