mercredi 8 mai 2013

புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது;கோத்தபாய ராஜபக்ஷ


நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல்களை வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு இடையில் அவை பகிரப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.நிதிப் புலனாய்வுப் பிரிவுகள், புலனாய்வு முகவர் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் ஆகிய தரப்பினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய வலய மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது.
பயங்கரவாதம், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிராந்திய வலயங்களுக்கு இடையில் புலானய்வுத் தகவல்கள் காத்திரமான முறையில் பகிரப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வழிகளில் இயங்கி வருவதாகவும், நிதி திரட்டி இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தத் தரப்பினர் அண்மையில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் ஆயுத பயிற்சி வழங்கவும் முயற்சி எடுத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையில் வலுவான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் காரணமாக இந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire