lundi 13 mai 2013

நாட்டையும் மக்களையும்அரசாங்கம் சுரண்டுகின்றது; லால்காந்த குற்றச்சாட்டு

news
நாட்டையும் மக்களையும் சுரண்டி தான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கோ, சர்வாதிகார அடக்கு முறைகளுக்கோ அஞ்சப் போவதில்லை. உத்தேச மின் கட்டண அதிகரிப்பை முழு அளவில் இரத்துச் செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று முதல் ஒரு வாரகால அவகாசம் வழங்குகின்றோம்.

வீண் பிடிவாதம் பிடித்தால் 21 ஆம் திகதி தேசிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடே ஸ்தம்பித்துப் போகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டதரணிகள், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் என 700 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உஷார் நிலையில் உள்ளது.

எனவே இனி அரசாங்கம் போலி நடிப்பையும் நிவாரண வாக்குறுதிகளையும் காண்பித்து மக்களை ஏமாற்ற முடியாது. சர்வாதிகார குடும்ப ஆட்சியை மக்களாட்சி வெற்றி கொள்ளும் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்வதோ, உழைக்கும் மக்களை பாதுகாப்பதோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

மாறாக நாட்டையும் மக்களையும் சுரண்டி தான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடக்கு முறைகளை பொது மக்கள் மீது பிரயோகித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க 2005 ஆம் ஆண்டில் மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதனை அசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு மனசாட்சியே இல்லை என்பது வெளிவந்து விட்டது. அவ்வாறானால் இனியும் அரசு கூறுவதற்கு தலையை ஆட்ட வேண்டிய தேவை இல்லை.

மின் கட்டண உயர்விற்கு ஜனாதிபதி வழங்கிய சலுகைகளை அலரி மாளிகைக்குள்ளேயே வைத்துக் கொள்ளட்டும். வெளியில் விட்டால் அதனை தோற்கடிக்க அணிதிரளுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இன்று முதல் சரியாக ஒரு வார கால அவகாசத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றோம். உடனடியாக மின் கட்டண அதிகரிப்பை விலத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் அடுத்த திங்கள் நள்ளிரவு முதல் முழு நாடும் ஸ்தம்பித்துப் போகும். இதனை ஈடு செய்ய அரசாங்கத்தின் அதிகாரத்தால் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire