mardi 28 mai 2013

நீங்கள் எல்லாம் போங்கள்.... ராணுவமா, நாங்களா என்று பார்த்து கொள்கிறோம்’ என்று புலிகள் எங்களையெல்லாம் வெளியே அனுப்பி, சவால் விட்டிருந்தால், அது வீரப் போராட்டமாக இருந்திருக்கும்;துக்ளக்

இலங்கைத் தமிழர் புதிதாக வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தியா கொடுக்கும் பணத்தை இலங்கை அரசு சூறையாடுகிறது. அந்தப் பணத்தில் சிங்களருக்கு வீடு கட்டிக் கொடுகIndian Housing Project்கப்படுகிறது. அந்தப் பணத்தை வேறு தேவைக்களுக்கு இலங்கை அரசு பயன்படுத்துகிறது’ என்றெல்லாம் இங்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இது குறித்து நாங்கள் இந்தியத் தூதரக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதலில் ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு ஏஜென்ஸி மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதில் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பிருந்ததால், நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே 5.5 லட்ச ரூபாயை படிப்படியாக வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி, தற்போது இந்திய அரசே நேரடியாக தமிழ் பயனாளிகளுக்கு பணம் கொடுக்கிறது. இதில் எந்த ஊழலோ, லஞ்சமோ, தரக் குறைவோ ஏற்பட வாய்ப்பே இல்லை’‘ என்றார் ஒரு தூதரக அதிகாரி. அதே போல், இந்தியா அமைத்துக் கொடுக்கும், ரயில் பாதையையும் இந்திய ஒப்பந்தக்காரரைக் கொண்டே செய்யப்படுகிறது. இலங்கை அரசிடம் பணத்தை நேரடியாகக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவும் தனது தரப்பு உதவியான நெடுஞ்சாலை அமைக்கும் பணியை, தங்கள் நாட்டு ஒப்பந்தக்காரர் மூலம், தனது ஊழியர்களைக் கொண்டே செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள் எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ.சாமி ஆகியோர் இந்த இதழில் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....
புதுக்குடியிருப்பு நகரில் எங்களுக்குப் பேட்டியளித்த இளைஞர், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்தைச் சந்திக்கச் சிபாரிசு செய்ததால், அந்தக் குடும்பத்தைத் தேடிக் கிளம்பினோம். வழியில் வேறு பலரையும் சந்தித்துப் பேசியபடியேதான் போனோம். ஒரு தேநீர் விடுதியில் நாங்கள் சந்தித்த சுமார் எழுபது வயதுப் பெரியவர் சொன்ன கருத்து குறிப்பிடத்தக்கது.
“போர் ஆரம்பித்த காலத்தில் நாங்களே பொடியன்களைத் (இளைஞர்களை) தட்டிக் கொடுத்தது உண்மை. ஆனால், காலப்போக்கில் உயிரிழப்புகள் அதிகமாக, அதிகமாக வேதனை எங்களை வாட்டத் துவங்கி விட்டது. எத்தனையோ பேச்சு வார்த்தைகளில் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்று, புலிகள் போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர்கள் கடைசி நாள் வரை அதற்குத் தயாராக இல்லாமல் போய் விட்டார்கள். இதனால் கொத்து கொத்தாகத் தமிழர்கள் பலியாக வேண்டியதாயிற்று. இலங்கை ராணுவம் விமானம் மூலம் குண்டுகளை வீசி தமிழர்கள் பலரைக் கொன்றது உண்மை. ஆனால், புலிகள் நினைத்திருந்தால் அதைத் தவிர்த்திருக்க முடியும். ‘எங்களுக்குத் தனி நாடே வேண்டாம். எங்களை விடுங்கள். நாங்கள் எங்காவது போய் பிழைத்துக் கொள்கிறோம்’ என்று எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் இயக்கத்தின் காலில் விழுந்து அழுதிருக்கின்றன. ஆனால், அவர்கள் மக்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது.
“நீங்கள் எல்லாம் போங்கள்.... ராணுவமா, நாங்களா என்று பார்த்து கொள்கிறோம்’ என்று புலிகள் எங்களையெல்லாம் வெளியே அனுப்பி, சவால் விட்டிருந்தால், அது வீரப் போராட்டமாக இருந்திருக்கும். இவ்வளவு மக்கள் அழிந்திருக்க மாட்டார்கள். அதே நேரம், போரும் எப்போதோ முடிந்து போயிருக்கும். ஆனால், புலிகள் வலுக்கட்டாயமாக, மக்களைத் தங்களுக்கு அரணாக வைத்திருந்ததால்தான், பல்வேறு நாடுகள் இலங்கை ராணுவத்திற்குப் பல உதவிகள் செய்த நிலையிலும், இந்தப் போர் இத்தனை ஆண்டுகள் நீடித்தது. மக்கள் அரண் இல்லாமல் போயிருந்தால், புலிகளை இலங்கை ராணுவம் எப்போதோ ஒடுக்கி இருக்கும்.
“தங்கள் பிடியில் இருந்த பகுதிகளைச் சுற்றி புலிகள் கண்ணி வெடிகளைப் பதித்து விட்டனர். தங்கள் பகுதிகளில் புலிகளே வரிவசூல் செய்தனர். ஆனால், அரசாங்கம் அந்த பகுதியைச் சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, அந்த ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், புலிகள் பகுதியிலுள்ள எங்களுக்கும் உணவு அனுப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அனுப்ப வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் செய்வார்கள்? பல தமிழர் அமைப்புகள் அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தபோது, புலிகளும் அப்படி நகர்ந்திருக்க வேண்டும். இப்போது ராணுவத்தை மட்டும் குறை சொல்லிப் புலம்புவதில் அர்த்தமில்லை” என்றார் அவர்.
அவர் குடும்பத்தில் எல்லோருமே போரில் இறந்துபோன நிலையில், அவர் மட்டுமே தனிமையில் வசிப்பதாகச் சொன்னபோது கலக்கமாக இருந்தது.
புதுக் குடியிருப்பு நகருக்கு வெகு அருகில்தான், விடுதலைப் புலிகள்Prabaharan houseஇயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த பங்கர் (பாதாள) வீடு இருக்கிறது. அந்த வீட்டைப் பார்வையிடச் சென்றோம். காட்டில் அடர்ந்த மரங்களை வெட்டி ராணுவம் தற்போது பாதை அமைத்துள்ளது. இரு புறங்களிலும் கம்பி வேலி கட்டி கண்ணி வெடிக்கான எச்சரிக்கைப் பலகைகளையும் நட்டு வைத்துள்ளனர். பிரபாகரன் வாழ்ந்த அந்த வீட்டை, கேன்டீன் மற்றும் டாய்லெட் வசதிகளோடு தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது இலங்கை அரசு. நாங்கள் சென்றபோது, ஒரு பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பஸ்ஸில் வந்து அந்த வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண தமிழ்க் குடும்பத்தினர் சிலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
மேலே ஒரு பெரிய ஹால் போல சும்மா இருக்கிறது ஒரு வீடு. டார்க் பச்சை மற்றும் லைட் பச்சை நிறங்களில் சின்ன சின்ன பிட் துணிகள் கொண்டு பொறுமையாகத் தொடுக்கப்பட்ட ஒரு வலை, அந்த வீட்டின் கூரை மீது விரித்து விடப்பட்டிருக்கிறது. (மேலே இருந்து பார்த்தால் மரம் மற்றும் புதர் போல் தெரியுமாம்.) அந்த ஹாலுக்குக் கீழே பூமிக்குள் மூன்று தளங்களில் இருக்கிறது பிரபாகரனின் வீடு. காரை கீழேயே ஓட்டிச் சென்று ‘பார்க்’ செய்யும் வகையில் அண்டர் க்ரௌண்ட் கார் பார்க்கிங்கும் இருக்கிறது. குண்டு விழுந்தாலும் இடியாத வண்ணம், பூகம்பம் வந்தாலும் உடையாத வண்ணம், பூமிக்குள் இருக்கும் அந்த வீட்டின் சுவர்கள் ஒவ்வொன்றும் மூன்றடி கனத்தில் உள்ளன.
வழக்கமான படிக்கட்டுப் பாதை போக, அவசரத்திற்கு தப்பித்து வெளியே செல்ல, கீழே உள்ள மூன்றாவது தளத்திலிருந்து தனி ஏணிப்பாதை ஒன்றும் உள்ளது. வீட்டைச் சுற்றி நான்கு இடங்களில் காவல் நாய்களின் கூடாரம். அதை அடுத்து நான்கு இடங்களில் மனித வெடிகுண்டு காவலாளிகளின் கூடாரம். அதைச் சுற்றி 12 அடி உயரத்திற்கு மின் கம்பி வேலி. அதற்கு வெளியே மேலும் நான்கு காவல் கூடாரங்கள். அதையடுத்து மற்றொரு கம்பி வேலி. அதற்கு வெளியே பல மீட்டர்களுக்கு கண்ணி வெடிகளைக் கொண்ட ஏரியா. இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவே இருந்திருக்கிறது பிரபாகரனின் அந்தப் பாதாள வீடு.
இதையெல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிச் சொல்ல ராணுவ வழிகாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘பொதுமக்களும், சாதாரண விடுதலைப் புலிகளும் வெளியே புல்லட்களுக்குப் பலியாகியபடி இருக்க, அதன் தலைவர் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருந்தார் பாருங்கள்’ என்று மக்களுக்கு உணர்த்தவே, இந்தப் பங்களாவை ராணுவம் சுற்றுலாத்தலமாக்கி இருப்பதை யூகிக்க முடிகிறது.
அதன் பின் நாங்கள் புதுக்குடியிருப்பு நகரிலிருந்து முல்லைத் தீவு நோக்கிப் பயணமானோம். போகும் வழியில் புறநகர் பகுதியில் (ஏறக்குறைய இறுதிப்போர் நடந்த பகுதியின் அருகில்), புதுப் புது வீடுகள் காணப்பட்டதையொட்டி, அங்கு சென்று விசாரித்தோம். ஒரு வீட்டில் கணவன் இல்லாமல் இரு குழந்தைகளோடு ஒரு பெண் வசித்து வந்தார். அவரோடு பேசினோம். “வீடில்லாமல் தவித்த எனக்கு ராணுவமே வீடு கட்டிக் கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்ட அவரிடம், போர்க் காலம் குறித்து விசாரித்தோம்.
“போர் நடந்த காலங்களில் இயக்கத்தில் பிடித்துக் கொண்டு போய் விடprabhakaran-idுவார்கள் என்று, பல வருடங்கள் நான் வீட்டை விட்டே வெளியே போகாமல் இருந்தேன். என் அம்மா ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்து எனக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆனதும் ‘எப்படா கர்ப்பிணி ஆவோம்’ என்று ஆவலாகக் காத்திருந்தேன். ஏனென்றால், கர்ப்பிணி என்றால் நான் தைரியமாக வெளியே சென்று வரலாம். இயக்கத்தினர் பிடித்துச் செல்ல மாட்டார்கள். நான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும். அதே போல், கர்ப்பம் தரித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளியே செல்ல ஆரம்பித்தேன். அப்போதும் இயக்கத்தினர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். கர்ப்பிணி என்று நம்பிய பிறகுதான் அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிறந்த பிறகு கைக்குழந்தையுடன் வெளியே செல்வேன். பிரச்னையிருக்காது. குழந்தை வளர, வளர குழந்தையை என் அம்மாவிடம் பிடுங்கிக் கொடுத்து விட்டு, என்னை மீண்டும் பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது. இதனால், மீண்டும் கர்ப்பம் தரித்தேன். மீண்டும் சுதந்திரமாக வலம் வந்தேன். ஆனால், இயக்கத்தினர் என் கணவரைத் தேடத் துவங்கி விட்டனர். இதனால் அவர் எங்கள் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று வரை அவர் என்னிடம் வரவில்லை” என்று கண் கலங்கினார்.
அருகில் இருந்த ஒரு வயதான பெண்மணியிடம் பேசியபோது, “இந்தியாதான் எனது வீட்டைக் கட்டித் தருகிறது. இலங்கை பணத்தில் 5.5 லட்ச ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் ரூபாய்) கொடுக்கிறார்கள். நாங்களே கட்டுமானப் பொருட்களை வாங்கி, கொத்தனார் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். நாம் கட்டக் கட்ட, தவணை முறையில் பணம் கொடுப்பார்கள். மணல் விலைதான் அதிகமாக உள்ளது. நாங்களே சித்தாள் வேலை பார்ப்பதால், இத்தொகைக்குள் கட்ட முடிகிறது. ஆடம்பரமாகக் கட்ட முடியாது. அடிப்படை வீடு ஒன்றையாவது கட்டிக் கொள்ள முடிகிறதே, அந்த வகையில் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார் அந்த வயதான பெண்மணி.
இதன் மூலம் ‘இந்தியா தருகிற பணம் கொள்ளை போகிறது’ என்று தமிழகத்தில் சிலர் வைக்கும் குற்றச்சாட்டும் பொய்யானது என்பது தெரிகிறது.
இதையடுத்து, நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிக் கிளம்பியபோது, வழியில் தண்ணீருக்கு நடுவே ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் காணப்பட்டது. போரின் வெற்றியை அறிவிக்கும் வகையில் இலங்கை அரசு அந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளது. அருகிலேயே, புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கருவாடாய்க் கிடக்கின்றன. அந்த நினைவுச் சின்னத்தை அடுத்து, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களும், தற்கொலைப் படகுகளும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சியும் அங்கு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து பார்வையிடுகிறார்கள்.Pirated-Ship
இதையடுத்து, நந்திக்கடல் காயல் (லகூன்) கரையோரமாக முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போனோம். வீடுகள் அதிகம் கண்ணில்படவில்லை. அப்பகுதியின் கடற்கரையில் ஒரு பாழடைந்த கப்பல் காணப்பட்டது. அருகே ஒரு ராணுவ கேன்டீனும் இருந்தது. அங்கு தேநீர் அருந்தியபடி, அந்தக் கப்பல் குறித்து விசாரித்தோம். “இந்த இடம்தான் போர் 100 சதவிகிதம் நிறைவுக்கு வந்த இடம். கடைசியாக மிஞ்சியிருந்த ஒரு சில விடுதலைப் புலிகள், இந்தக் கப்பலுக்குள் ஒளிந்து கொண்டு சுட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களைக் கொன்று ராணுவம் போரை நிறைவு செய்தது” என்றார்கள் அங்கிருந்தவர்கள். அந்த கப்பலைப் பற்றி விசாரித்தபோது, “பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக் கடல் பகுதியில் ரிப்பேராகி நின்ற இந்த வெளி நாட்டுக் கப்பலை, விடுதலைப் புலிகள் இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். இதிலிருந்த எஞ்ஜின்கள், இதர பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றித் தங்களது படகுகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்” என்று தெரிவித்தனர்.
இதன்பின், நாங்கள் முல்லைத் தீவுக்குப் போய் அங்கிருந்த தமிழர்கள் சிலரிடம் பேசினோம். கடைசி நாள் போர் குறித்து அவர்கள் விவரித்தனர். “முள்ளிவாய்க்கால் பகுதியில் நாங்கள் புலிகளுடன் சிக்கிக் கொண்டோம். அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதாக இல்லை. ராணுவமோ புதுக்குடியிருப்புப் பகுதி வழியாகவும், முல்லைத் தீவு வழியாகவும் எங்களை நெருங்கி விட்டது. இருபுறம் ராணுவம். கீழ்புறம் கடல், மேல்புறம் நந்திக்கடல் காயல். எங்கும் தப்ப முடியாது. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய் விட்டது. அந்த நேரத்தில் இலங்கை ராணுவம் எப்படியோ கடல்பகுதிக்கு முன்னேறி வந்து, அங்கிருந்தபடி புலிகளைத் தாக்கத் துவங்கியது. இதனால் நாங்கள் நந்திக்கடல் மீதான குறுகிய பாலத்தின் வழியாகத் தப்பி முல்லைத் தீவை நோக்கி ஓடி வந்தோம்.mullaitivu tamils
“முதலில் எங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவம், பிறகு நாங்கள் பொதுமக்கள் என்பது தெரிந்ததும் நிறுத்திக் கொண்டது. பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து காயலில் விழுந்து தப்பிக்க நினைத்து உயிரிழந்தனர். பொதுமக்கள் வெளியேறியதும், ராணுவம் முழுமையாக அந்தப் பகுதிக்குள் புகுந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. கடைசி நாள் போரில், புலிகளோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்து போனாலும், எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் தப்பித்து இன்று உயிரோடு இருப்பது நம்ப முடியாத அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று விவரித்தார்கள் அவர்கள். அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லும்போதே, அவர்கள் கண்களில் ஒருவிதமான பீதியைப் பார்க்க முடிந்தது.
இதன் பின் நாங்கள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவரது குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம். கணவன், மனைவி, இரு மகன்கள் அடங்கிய குடும்பம் அது. மூத்த மகன் இடது காலில் செயற்கைக் கால் பொருத்தியிருந்தார். அந்த டிரைவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். “நான் அரசு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றுகிறேன். பத்து வருடங்களுக்கும் மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். போரில் காயம்படும் புலிகளை உடனுக்குடன் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்ப்பது என் பணி. எத்தனையோ ஆயிரம் புலிகளை அப்படி நான் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தைகள் வளர வளர, எனக்குப் பயம் வரத் துவங்கியது. இயக்கத்தினரிடம் சென்று என் குடும்பத்தை வெளியே அனுப்பி விடுமாறு கெஞ்சினேன். நான் அவர்களுக்குச் செய்த உதவிகளை நினைத்து அவர்கள் மனமிரங்குவார்கள் என்று நம்பினேன். ஆனால், அவர்கள் உடன்படவில்லை.
“அதன் பின் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அவர்களிடம் ‘நான் இங்கு இருந்து உங்களுக்கு ஊழியம் செய்கிறேன். என் மனைவி, குழந்தைகளை மட்டும் வெளியே அனுப்பி விடுங்கள்’ என்று கெஞ்சினேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக, என் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, ‘உயிர் மேல் உனக்கு அவ்வளவு ஆசையா?’ என்று மிரட்டினார்கள். அதன் பின் ஒருநாள் விமானப் படைத் தாக்குதல் சமயத்தில், பதுங்கு குழியில் என் மனைவியும், குழந்தைகளும் ஒளிய நேர்ந்தபோது, மண் சரிந்து விட்டதால் என் மகள் உயிரோடு மண்ணில் புதைந்து இறந்து போனாள்” என்று கண் கலங்கியபடி, தனது செல்ஃபோனிலிருந்த தனது மகளின் வால்பேப்பர் ஃபோட்டோவைக் காட்டினார்.
“மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயக்கத்தினரிடம் போனேன். நான் இறுதி வரை உங்களோடு இருக்கிறேன். தயவு செய்து என் குடும்பத்தை மட்டும் வெளியே அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சினேன். அவர்கள் என்னைப் பலவந்தமாகத் துரத்தியடித்தனர். அதோடு மறுநாளே என் வீட்டிற்கு வந்து, என் மூத்த மகனைப் பார்த்து விட்டு, அவனைத் தங்களோடு அழைத்துச் சென்று விட்டனர். நானும் என் மனைவியும் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். இப்போதுதான் ஒரு மகளை இழந்திருக்கிறோம். என் மகனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது, மறுபடியும் துப்பாக்கியைக் கழுத்தில் வைத்து மிரட்டி விட்டுச் சென்றனர். நாங்கள் அழுதபடியே வீட்டில் இருந்தபோது, என்னை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் ஓட்ட அழைத்துச் சென்று விட்டனர். இயக்கத்துக்குப் போன என் மகன் ஓரிரு நாளில் தப்பி வந்து விட்டான். ஆனால், அவனை நாங்கள் ஒளித்து வைக்கும் முன்பாகவே, மீண்டும் வந்து பிடித்துக் கொண்டு போய் விட்டனர்.
“அடுத்த முறையும் அவன் தப்ப முயன்றிருக்கிறான். அப்போது கோபமாகி அவன் காலில் சுட்டு விட்டனர். முழங்காலுக்குச் சற்று மேலே பாய்ந்த குண்டு மறுபுறமாக வெளியே வந்து விட்டது. நானே என் மகனை எனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டியதாகி விட்டது. அப்போது இலங்கை அரசின் ரெட் க்ராஸ் கப்பல் முல்லைத் தீவிற்கு அடிக்கடி வரும். காயம்பட்டவர்களை அதில் எடுத்துக் கொண்டு போவார்கள். புலிகள்தான் அதற்குப் பாஸ் வழங்கி, கடும் காயம்பட்டவர்களை ரெட் க்ராஸ் ஆட்களிடம் ஒப்படைப்பார்கள். என் மகன் சுடப்பட்ட நேரத்தில் ரெட் க்ராஸ் கப்பல் வந்ததால், என் மகனை அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி இயக்கத்தினரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘புல்லட் தான் வெளியே வந்து விட்டதே? பிறகென்ன? இங்கேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி விட்டனர். ஆனால், இங்கே பார்த்த வைத்தியம் கைகூடவில்லை. உள்ளே நரம்புகள் அழுகிப் போனதாகக் கூறி, ஓரிரு நாட்களில் அவனது காலையே வெட்டி எடுத்து விட்டார்கள்.displacement vanni
“நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அதன் பிறகு எனது மனைவியையும், எனது இளைய மகனையும் மட்டும் கப்பலில் அனுப்பி வைக்கச் சம்மதித்தனர். அவர்கள் வெளியேறினார்கள். போரின் இறுதி கட்டத்தில்தான் நான் என் மூத்த மகனைத் தூக்கிக் கொண்டு ரிஸீவிங் பாயின்ட்டிற்கு ஓடி ராணுவத்திடம் தஞ்சம் புகுந்தேன். விடுதலைப் புலிகள் மாதிரி அரக்கர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவர்கள் தலைமையில் ஒரு தனி நாடு அமைந்திருந்தால், அதுதான் உலகத்திலேயே கொடூரமான நாடாக அமைந்திருக்கும்” என்றார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக்ரோஷமாக. “தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த நாள் முதலே, அவர்கள் மிருகத்தனமாக மாறி விட்டார்கள்” என்றார் அவரது துணைவியார். அந்தக் காலை இழந்த இளைஞன் இன்னமும் மன அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை.
இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, வட மாகாணத்தின் பல பகுதிகளில் பல சோகக் கதைகள் வெடித்து வருகின்றன. ஆனால், இந்த உண்மைகளை முதலில் உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் சிலர், உடனே ‘அப்படியானால் இலங்கை ராணுவ வீரர்கள் எல்லாம் உத்தமர்களா?’, ‘ராஜபக்ஷ என்ன மகாத்மாவா?’ என்றுதான் அவசர அவசரமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். ‘ராஜபக்ஷ அரசு மீது எந்தத் தவறுமே இல்லையா?’ என்ற கேள்விக்கு அடுத்த இதழில் பதில் தேடுவோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire