mercredi 8 mai 2013

30 வருட போராட்டம் பெற்றுத் தந்த ஒரேயொரு ஆறுதல்;தேர்தல்


(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக் கழகம்)
aneesஇவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் பகுதியில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பில் கூறப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இது தொடர்பாக பல இடங்களில் தமது கருத்தினை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதே கருத்தினை பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களும் அண்மையில் உறுதிபடுத்தியுள்ளார். தொடர்ச்சியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் இந்த முடிவின் பின்னணியில் பாரிய பங்களிப்பு செலுத்தியுள்ளமை யாவரும் அறிந்ததே. உள்நாட்டு காரணிகளை விட இது விடயத்தில் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் பிரதான காரணமாகும். இனிமேலும் இந்த தேர்தலை பின்போட முடியாது என்ற ஒரு நிலையிலேயே இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிகின்றது. எது எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்த முடிவானது மிகவும் வரவேற்கத் தக்கதோடு வடக்கு தமிழ் மக்கள் மத்தியிலே இது பாரியதொரு எதிர்பார்ப்பையும் ஒரு ஆறுதலையும் கொடுத்துள்ளது.
தேர்தலை பற்றி ஜனாதிபதி அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து ஒருபுறம் சில கட்சிகள் தமது முதலமைச்சர் வேட்பாளர்களையும் ஏனைய வேட்பாளர்களையும் தேடுகின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க மறுபுறமாக சில கட்சிகள் இந்த தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கான காரணங்களையும் வழிகளையும் தேடிக் கொண்டிருக்கின்றன. இத்தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோரின் காரணங்கள் வலிமையானதாக தெரியவில்லை. 2009 மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட மாகாணம் பல தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்பொழுதெல்லாம் சொல்லப்படாத காரணங்கள் இப்போது மட்டும் முன்நிறுத்தப்படுவதானது அதன் நியாயபூர்வ தன்மையை நிச்சயம் கேள்விக்குள்ளாக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் என பல தேர்தல்களை வட மாகாணம் ஏற்கனவே கண்டிருக்கின்றது. அப்பொழுதும் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியோ அல்லது மக்களின் மீள்குடியேற்றமோ முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை இத்தேர்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழர் தெரிவுசெய்யப்பட முடியாது என்பதாலும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் கணிசமான அளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் மத்திய அரசாங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதாலும்; உள்ளூராட்சி சபைகளில் சில இடங்களை தமிழ் தரப்பு கைப்பற்றினாலும் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்கமுடியாது என்பன போன்ற காரணங்களினாலும் தான் இப்பேற்பட்டவர்கள் அவற்றை தடுக்கவில்லையோ என இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. மறுபுறமாக, வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் தமிழர் தரப்பு அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியை தமது கைகளில் தக்க வைத்துக்கொள்வார்கள் என்ற ஒரு பாரிய அச்சம் ஒன்று இன்று பரவலாக ஏற்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. மாகாண சபைகளுக்கு யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் முக்கியமான அதிகாரங்களாகப் பேசப்படும் காணி, மற்றும் பொலிஸ் தொடர்பான அதிகாரங்கள் பற்றி இன்னும் மத்திய அரசுக்கும் சில மாகாண அரசுகளுக்கும் இடையில் ஒரு இழுபறி நிலை காணப்படுவது யாவரும் அறிந்ததே. இந்த இரண்டு அதிகாரங்களும் இல்லாத மாகாண சபை என்பது உண்மையில் ஒரு “பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாகவே” இருக்கும் என்பதுதான் யதார்த்தம். இதனை நன்கு அறிந்து கொண்டும் இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுப்பது என்பது ஆகக்குறைந்தபட்ச அதிகாரங்களையாவது தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு கொடுப்பதற்கு இந்த சக்திகள் விரும்பவில்லை போலும் எனவே நினைக்கத் தூண்டுகின்றது.
இக்கட்டத்தில் நாம் யாவரும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது இந்த ‘மாகாண சபை’ என்ற விடயத்தினை விடுதலைப் புலிகள் ஒருபோதும் தமது அரசியல் தீர்வாக இறுதிவரை எற்றுக்கொள்ளாத போதிலும் கூட இதனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு வட கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் செலுத்திய விலை என்பது எதுவிதத்திலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது சீர்திருத்தத்தின் மூலமாக இந்த மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டாலும் இன்று வரை அந்த தேர்தலில் வாக்களிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வடக்கு வாழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் துரதிஷ்டமான ஒன்றேயாகும். குறைந்த அதிகாரங்களுடன் கூடிய ஒரு சபையாக இருந்தாலும் கூட தமது பிரதேசத்தை தாமே ஆள்வதற்குக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே பெரும்பான்மையான வடக்கு தமிழர்கள் இந்த தேர்தலை பார்க்கின்றார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால், இம்முறைமை அறிமுகம் செய்யப்பட்டு ஏறத்தாள 25 வருடங்களின் பின்னர்தான் அவ்வாறான ஒரு தேர்தலைப் பற்றி பேச அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
முப்பது ஆண்டு கால விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் வாழ்வினை அப்படியே முழுமையாக திசை திருப்பி விட்டிருக்கின்றது. இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்று சொல்லுமளவிற்கு அத்தனையையுமே இழந்து விட்டிருக்கின்றார்கள். ஏறத்தாள 1.5 மில்லியன் தமிழ் மக்கள் நிரந்தரமாக இந்நாட்டை விட்டு வெளியேறி இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்; பல ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத உயிர்களை அநியாயமாக பறிகொடுத்துள்ளார்கள்; யுத்தத்தில் காயப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், அங்கவீனமானவர்கள், அநாதையானவர்கள், விதவையானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று எத்தனை ஆயிரம் பேர்கள் இன்று நடைப்பிணங்களாக இந்த மண்ணிலே வாழ்கின்றார்கள். அது மட்டுமா, வீடு வாசல்களை இழந்தவர்கள்; காணிகளை இழந்தவர்கள்; கல்வியை, தமது பதவிகளை, பட்டங்களை இழந்தவர்கள்; தமது பொருளாதாரங்களை இழந்தவர்கள்; மொத்தத்தில் தமது வாழ்வையே தொலைத்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கின்றார்கள்?  ‘உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள்’ என்றும் ‘அகதிகள்’ என்றும் எத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் தமது எதிர்காலம் என்பது என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்? அவர்கள் அதை மட்டுமா தொலைத்தார்கள்? விலைகொடுத்து வாங்க முடியாத அவர்களின் அழகிய கலாச்சாரத்தையும் அல்லவா இன்று இழந்து நிற்கின்றார்கள். இத்தனையையும் இழந்த பின்னர் அவர்களுக்கு கிடைக்கின்ற ஒரேயொரு ஆறுதல் தான் இந்த மாகாண சபை தேர்தல் என்பது.
இந்த நிதர்சனத்தை சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் புரிந்து கொள்ள வேண்டும். “கடவுள் வரம் கொடுக்க நினைத்தாலும் பூசாரி அதனை தடுக்க நினைப்பது” போல நமது செயற்பாடுகள் ஒருபோதும் அமையக் கூடாது. இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதிப்பவர்களும் அதனை கட்டியெழுப்ப நினைக்கின்ற அத்தனை பேரும் இந்த வரவிருக்கும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க எமது நாட்டு ஜனாதிபதிக்கும் இந்த அரசங்கத்திற்கும் உதவ வேண்டும். அதுதான் தமது எதிர்காலத்தையே தொலைத்து நிற்கும் வடக்கு மக்களுக்கு நாம் செய்யும் மனிதாபிமான உதவியாகவும் இந்த நாட்டின் நிரந்தர சமாதனத்திற்கும் அளிக்கக் கூடிய மிகப்பெரிய பங்களிப்பாகும். “வெந்த புண்ணிலே வேலினைப் பாய்ச்சுவது” போல நமது செயற்பாடுகள் ஒருபோதும் அமையக் கூடாது.
உண்மையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமென்பது கடந்த கால இனவாத அரசுகளின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் மற்றும் ஒருதலைப் பட்சமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் என்பவற்றாலும் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களின் போக்குகளினாலுமே உருவாகின என்பது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஒரு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகத்தின் விரக்தியின் வெளிப்பாடாகவே அந்த போராட்டம் நோக்கப்பட வேண்டும். போராட்டத்தின் இறுதி இலக்கு மற்றும் அதனை அடைந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பாக நமக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிறையவே உண்டு. ஆனால் அந்த நிலைமைக்கு அவர்களை பலாத்காரமாக தள்ளிய காரணிகளை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வட-கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம் மற்றும் அதன் வரலாறு என்பது அந்நியராட்சியின் போது யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனான சங்கிலியனும் பின்னர் வன்னியை ஆண்ட கடைசி மன்னன் பண்டாரவன்னியனும் தோற்கடிக்கப்படும் வரை நிலைத்து நின்ற ஒரு நீண்ட வரலாற்று ஆதாரம். “ஆண்ட பூமியை மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?” என்ற எண்ணம் தான் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட வைத்ததென்பது வரலாறு. அந்த போராட்டத்தின் பெறுபேறுகளைத்தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகம் மாத்திரமின்றி முழு நாடுமே இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
இன்று இந்த நாட்டிலே ஏனைய எல்லா மாகாணங்களிலும் மாகாண சபை முறைமை நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் எந்த மாகாணத்தையும் அதன் பிரச்சினைகளையும் அடிப்படை நோக்கமாக முன்வைத்து இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டதோ அந்த மாகாண மக்கள் அதனை அனுபவிக்க முடியாமல் இருப்பதானது கவலைக்குரியதே. யுத்தத்தினால் முழுமையாக சீரழிந்து போயுள்ள அந்த பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அம்மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்விதம் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியும்? “அபிவிருத்தியிலான சம சந்தர்ப்பம் அல்லது சம வாய்ப்புகள்” என்பது நிலையான சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் அடிப்படை என்ற உலகளாவிய ரீதியிலான கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறித்த இம் மாகாணத்திற்கான தேர்தலானது இம்மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களின் எதிர்கால இருப்பிற்கு தடையாக இருக்கும் என எண்ணும் நிலைப்பாடானது இத்தேர்தலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளின் தரப்பு வாதமாகும். கடந்த காலங்களில் வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறுகள் இந்நிலைப்பாட்டின் நியாயத் தன்மையினை கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும், குறித்த இத்தவறினால் இன்றுவரை அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தினருக்கான தீர்வு முன்னெடுப்புகளின் போது எந்தவொரு நேர்முகமான சமிக்ஞையையும் வடக்கு வாழ் தமிழ் சமூகமோ, அவர்கள் சார்பான அரசியற் பிரதிநிதிகளோ உறுதிபட உரைக்காமை இத்தேர்தலுக்கான எதிர்ப்பின் குரலை மேலும் வலுவடையச் செய்கின்றது. இந்த எதிர்ப்பின் காரணம் சரியானவகையில் தமிழ் தரப்பினரால் விளங்கிக்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளிற்கான தீர்வு நடவடிக்கைகளில் உளப்பூர்வமான ஒத்துழைப்பு நல்கவேண்டிய அதேசமயம், இம் மக்களின் இடையூறின்றிய எதிர்கால வாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியது மிக அத்தியாவசியத் தேவையும் தமிழ் சமூகத்தினரின் தார்மீகக் கடமை என்பதும் எனது ஆணித்தரமான கருத்தாகும்.
தமிழ் மக்களின் இன்றைய பலவீனமான நிலையை “வரலாறுகள் தம்மைத்தாமே மீட்டிக் கொள்ளும்” என்று தம்முள் பொருமிக்கொள்வோர்க்கு இனங்கள் மத்தியிலான ஒருமைப்பட்ட உளப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கூறிய சொற்றொடரைப் பொய்ப்பிப்பதாக அமையவேண்டும் என்பதுதான் எம் எல்லோரினதும் பிரார்த்தனையாகவும் விருப்பமாகவும் இருக்க வேண்டும். இனங்களுக்கிடையிலான சரியான பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டாயமாக கட்டியெழுப்ப வேண்டிய நிலைக்கு இன்று நாம் யாவரும் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
சிலவேளைகளில் முஸ்லிம் மக்களின் வாக்குப்பதிவுகள் தொடர்பாகவோ அல்லது அவர்கள் வாக்களிப்பது தொடர்பாகவோ ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை உரிய முறையில் அரசிடம் முன்வைத்து அதற்கான தீர்வினை பெறுவதுதான் உசிதமான செயலாகும். மாறாக தேர்தலை பிற்போட வைப்பதோ அல்லது அதற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதோ காத்திரமான செயலாக பார்க்கப்பட முடியாது. இது விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பில் தமது நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் மீதான இனச்சுத்திகரிப்புக்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என அண்மையில் பாராளுமண்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கூறியுள்ள கருத்தை இவ்வாறான சந்தர்ப்பங்களில் திறந்த மனதுடன் வெளிக்காட்ட முன்வர வேண்டும். முஸ்லிம்களின் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்கள் பேசவும் தமது உதவிகளை வழங்கவும் தயக்கம் காட்டக் கூடாது.
எனவே இந்நிலையில், மேலும் காரணங்களைக் கூறிக்கொண்டு இந்த தேர்தலை பிற்படுத்த முயற்சிக்காது குறித்த இந்த தேர்தலை இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைக் களைந்து ஒரு புதிய அரசியல் சமூக கலாச்சாரத்தை கட்டியெழுப்ப கிடைத்த ஓர் சிறந்த சந்தர்ப்பமாக நாம் யாவரும் பயன்படுத்த வேண்டும். மாறாக ஏற்கனவே புரையோடிப்போயுள்ள உள்ளக முரண்பாடுகளை மென்மேலும் வளர்ப்பதற்கு பயன்படுத்த முனைவதானது ஒரு மனிதாபிமான செயற்பாடாக இருக்க முடியாது. குறிப்பாக வடக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த இந்த தேர்தல் பயன்படுத்தப்படுவதானது காலத்தின் கட்டாயமாக சம்பந்தப்பட்ட சகலராலும் நோக்கப்பட வேண்டும்.
சிலவேளை இந்த தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமாக இருந்தால் அதனை செய்யும் உரிமை வடக்கில் வாழும் மக்களுக்கு மாத்திரமே உண்டு என்பதையும் இந்த தேர்தலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசுடன் இருந்து கொண்டு அரசின் முடிவுக்கு எதிராக செயற்படும் உரிமை கட்சிகளுக்கு இருக்கின்ற போதிலும் அரசியல் யாப்புக்கு மாற்றமாக செயல்பட யாருக்கும் உரிமை இல்லை. மாகாண சபை தேர்தல் மற்றும் அதன் அதிகாரங்கள் என்பன யாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள். யாப்பு ரீதியாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் அதிகாரத்தை கொடுக்க மறுக்கின்ற அதிகாரம் யாருக்கும் இந்த நாட்டில் இல்லை. தேர்தல் ஒன்றில் தமது அரசியல் சாணக்கியங்களைப் பயன்படுத்தி நேர்மையான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற யாவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து தேர்தலுக்கு விரோதமாக கருத்து தெரிவிப்பதானது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகவே பார்க்கப் படவேண்டும்.
இந்த மாகாண சபையும் அதற்குரிய அதிகாரங்களும் நிச்சயமாக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளை சமமான நிலையினின்று என்றுமே நிறைவு செய்யப்போவது இல்லையென்பது தெளிவு. ஆனாலும் இவ் ஏற்பாட்டின் மூலம் அம்மக்களை மீண்டுமொரு முறை முழுமையான ஜனநாயக நீரோட்டத்துக்குள் கொண்டு வருவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த தேர்தலை பயன்படுத்த முடியுமானால் அதுதான் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக இருக்க முடியும்

Aucun commentaire:

Enregistrer un commentaire