dimanche 12 mai 2013

பிரபாகரன் பகலில் ஓய்வு எடுக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் அவரேதான் உள்ளே பூட்டிக்கொள்ள வேண்டும் அந்தரங்க ஆலோசனை அறையில் இருக்கும்போதும் இதே நிலைதான்;கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை,


Prabakaran2பொதுவாகவே போராட்டங்கள் நடக்கும் நாடுகளில் போராட்டத் தலைவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே பார்க்கப்படும். அதிலும் விசேடமாக ஒரு தனிநபர் ஆளுமையின் ஊடாக கட்டியெழுப்பப்படும் போராட்டக்குழுக்களில் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு என்பது ஒட்டு மொத்த போராட்டத்தின் பாதுகாப்பாகவே கருதப்படும். போராட்டம் என்பது ஒரு இலக்கை நோக்கியதாக பயணிக்கும்போது அந்த இலக்கை முழுமையாக அடையும்வரை அந்த போராட்டத்தின் அச்சாணியாக திகழும் தலைமைத்துவம் இறுதிவரை பாதுகாக்கப்படுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
 போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் (மிகவும் பிரபல்யம் அடையாத காலத்தில்) இந்த தலைமைத்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டாலும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக இவர்கள் வளர்ச்சியடைகின்றபோது தலைமைத்துவமானது விசேட பாதுகாப்பை வேண்டி நிற்பது பொதுவாக உலகமெங்கும் வழக்கத்தில் உள்ள ஒரு விடயமாகும். போராட்டத்தின் வெற்றி-தோல்வி என்பது அதிகளவில் இந்த தலைமைத்துவத்தின் சீரான இராணுவ மற்றும் அரசியல் வழிநடத்தலிலேயே அதிகம் சார்ந்து நிற்பதானது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் அவர்களின் எதிரியென கருதப்படுபவர்களின் பிரதான இலக்காக எப்போதும் இந்த தலைமைத்துவமே இருக்கும். சிலவேளைகளில் இந்த தலைமைத்துவம் அழிக்கப்பட்டால் போராட்டத்தை இலகுவில் முடிவுக்கு கொண்டு வரமுடியும் அல்லது பலமிழக்கச் செய்துவிடலாம் என அவர்கள் நினைப்பதே காரணமாகும்.
உலக வரலாறுகளில் காணப்பட்ட அதிகமான போராட்டத் தலைவர்கள் மற்றெல்லா விடயங்களை விடவும் தமது சொந்த பாதுகாப்பிற்கும் தம்மைச் சார்ந்த முக்கியமானவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளமையை நாம் காணலாம். சாதாரணமாக ஒரு நாட்டிற்குள்ளேயே தமது இலக்கை அடைந்துகொள்ள போராடிய போராட்டக் குழுக்களின் தலைவர்கள் முதல் உலகையே ஆட்டிப்படைக்கும் நோக்குடன் இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடங்கிவைத்த ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் வரை தமதுBunker சுயபாதுகாப்பு விடயத்தில் அதிக நாட்டம் செலுத்தியுள்ளதை வரலாறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. பொதுவாகவே இவ்வாறான போராட்டக் குழுக்களின் வரலாற்றில் தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்கென்றே விசேடமான ஒரு படைப்பிரிவினர் அமைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக அதிகளவு நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர்களே இதற்காக தெரிவு செய்யப்படுவர். தலைமைத்துவத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அல்லது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களே பெருமளவிற்கு இவ்வாறு நியமிக்கப்படுவர். சிலவேளைகளில் வெளியாட்கள் அவ்வாறான பணிக்கு அமர்த்தப்படும்போது அவர்களது விசுவாசம் என்பது பலமுறை அவர்களுக்கு தெரியாமலேயே பரீட்சிக்கப்படுவது ஒரு போராட்ட மரபாகும். அதேபோன்றே அவ்வாறான போராட்டக் குழுக்களின் உளவுப்பிரிவினரின் செயற்பாடும் இருக்கும். இதனால் தனது சுயபாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு தலைவனே சிறந்த ஒரு போராட்டத் தலைவனாக இருக்கமுடியும் என்பது ஒரு பொதுவான எண்ணமாகும்.
எதிரியின் பிரதான நிலைத்த இலக்காக தலைமைத்துவம் குறிவைக்கப்படுவதால் இவ்வாறான தலைமைத்துவங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவர்கள் தமது தலைமைக்காக தம் இன்னுயிரை துறப்பதற்கு எந்நேரமும் தயாராகவே இருப்பர். பலதரப்பட்ட கடின பயிற்சியின் பின்னர் இப்பணிக்கு அமர்த்தப்படும் இவர்களின் நாளாந்த செயற்பாடுகள் கூட இவர்களுக்கு தெரியாமலேயே அந்த போராட்டக்குழுக்களின் உளவுப்பிரிவினரால் மிகவும் துல்லியமாக கண்காணிக்கப்படுவது ஒரு திட்டமிட்ட ஏற்பாடாகும்.
உலக வரலாற்றில் கூடவே இருந்தவர்களால் பல போராட்டத் தலைவர்கள் அழிக்கப்பட்டமையும் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் நிறையவே உண்டு. தலைமைத்துவ பதவி மோகம், தனிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் எதிரியினால் கிடைக்கும் நன்மைகள் என்பன இவற்றிற்கான நோக்கம் கருதிய காரணங்களாக பொதுவில் அமைகின்றன. இந்நிலைமை போராட்டத் தலைவர்களின் விடயத்தில் மாத்திரமின்றி நாடுகளின் தலைவர்களின் விடயத்திலும் பொருந்துகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது. உதாரணமாக, யுத்தத்தின்போது ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுசைனும் அவரது படைகளும் அவரது சொந்த படைத்தளபதிகளாலேயே நேசப்படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்டமை வரலாறு அறிந்த உண்மையாகும். எனவே போராட்டத்தின் வெற்றி-தோல்வி என்பது அதனை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பவற்றில் தங்கியுள்ளமை திண்ணமான வெளிப்படை.
bunker_insideறத்தாள 3 தசாப்தங்கள் இலங்கையில் ஈழக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக்கொண்ட பல்வேறு இராணுவ வெற்றிகளுக்குப் பின்னால் அதன் தேசிய தலைவராக கருதப்பட்ட பிரபாகரன் இருந்து வந்தார் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியாது. அவருடைய இராணுவ வியூகங்கள், தீர்க்கதரிசனமான எதிர்வுகூறல்கள் மற்றும் முன்னிறுத்தல்கள், அவை தொடர்பான வழிநடத்தல்கள் என்பன விடுதலைப் புலிகளின் முன்னேற்றம் மற்றும் நோக்க நிறைவேற்றம் என்பவற்றிற்கான பிரதானமான காரணிகளாகப் பார்க்கப்படலாம். படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்த போராட்ட இயக்கத்தின் வெற்றிகளானவை ஒரு கட்டத்தில் உலகிலேயே முதல்தரமான போராற்றலும் இராஜதந்திர உபாயங்களும் கொண்ட ஓர் “பயங்கரவாத இயக்கம்” என்ற அடையாளப்படுத்தலுடங்கூடிய படிநிலைக்கு இவ்வியக்கத்தை உயர்த்தியது. எதுவிதத்திலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு இயக்கமாக இது சர்வதேச மட்டத்தில் சகலரையும் எண்ண வைத்தது. அப்பேற்பட்ட இயக்கத்தின் தலைவரான  பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு வியூகம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது என்பதும்; அதன் மூலம் அவர் அடைந்து கொண்ட வெற்றிகளுக்கு பின்னணியிலிருந்த சவால்களையும் ஆராய்வதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
முதலில் ஒருவிடயத்தை நாம் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது மிகவும் கனகச்சிதமாக இறுதிவரை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், அவரது மரணம் அவரைச்சுற்றியிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அனைவரினதும் வீரச்சாவின் பின்னரேயே நிகழ்ந்திருக்கின்றது என்பதை சாதாரணமாகவே யாவரினாலும் ஊகித்துக் கொள்ளமுடியும். மரணம் சம்பவித்த விதம், நேரம் மற்றும் யுத்த சூழ்நிலை என்பன இதனை உறுதிப்படுத்துகின்றன. அதாவது விடுதலைப் புலிகளினால் விசேட தேர்வுக்கு உட்படுத்தி பயிற்றுவிக்கப்பட்ட அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தமது இறுதி மூச்சுவரை தமது தலைமைத்துவத்தை பாதுகாக்கின்ற பணியினை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்கள் என்றுதான் நாம் நிறைவுக்கு வரவேண்டியுள்ளது. காரணம் பிரபாகரனின் மரணத்துடன் யுத்தமும் நிறைவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் “முள்ளிவாய்க்கால் முடிவின்” பின்னர் பகிரங்கமாகப் பிரகடனம் செய்துவிட்டது. அவரின் மரணத்தின் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுக்குமளவிற்கு பலமான எதிரிகள் இருக்கவில்லை என்பதையே இந்த பிரகடனம் வெளிக்காட்டி நின்றது.Bunker-4
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருந்து யுத்தம் செய்த காலப்பகுதியில் அவருடைய பிரத்தியேக பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ‘பங்கர்கள்’ அல்லது ‘பதுங்கு குழிகள்’ அன்றில் ‘மறைவிடங்கள்’ பற்றியே இக்கட்டுரையின் பிரதான கவனம் செலுத்தப்படுகின்றது. “காற்றுப்புகாத இடங்களில் கூட விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினர் ஊடுருவிவிடுவர்” என்ற ஒரு கருத்து பொதுவாகவே அக்காலத்தில் இருந்துவந்தது. அதன் மூலம் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினரின் பலம்பொருந்திய சாதுரியங்களும் சாதனைகளுமே முன்நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த உளவுப்பிரிவினருக்குக்கூட சவாலாக அமைந்த ஒரு விடயமாகவே இந்த அமைப்பின் தலைவரின் பாதுகாப்பு இருந்து வந்துள்ளதையே அவரது பாதுகாப்பு மறைவிடங்களின் கட்டமைப்பும் அதன் நுட்பமான வடிவமைப்புகளும் பிரதிபலித்து நிற்கின்றன.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும்வரை பிரபாகரனின் மறைவிடங்கள் பற்றிய சில யூகங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலைகொண்டிருந்தாலும்கூட அதனை நேரடியாகக் காணும் பாக்கியம் எவருக்கும் கிட்டவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டிலும்கூட, குறிப்பிட்ட ஒரு சுற்று வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அதனை காணும் அல்லது சுற்றிப் பார்வையிடும் அல்லது அந்த இடங்களுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என நான் நினைக்கின்றேன். காரணம் அந்தளவு தூரம் அவை விடுதலைப் புலிகளின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக நிர்ணயிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டமையே ஆகும்.
இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்த பிரபாகரனின் மறைவிடங்களை அமைப்பதற்கு பல சிறைக்கைதிகளும் சிலவேளைகளில் விடுதலைப்புலி உறுப்பினர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அண்மையில் ஒரு தமிழ் இணையதளத்தில் (இலங்கைநெற்.கொம்) காணப்பட்ட ஒரு கட்டுரையில் இதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்ட பிரபாகரனின் மறைவிட பங்கரை வடிவமைத்துக் கொடுத்த ஒரு புலத்தில் வாழும் இலங்கைத் தமிழரே இதனைத் தெரிவித்திருந்தார். அதாவது குறித்த பதுங்கு குழிகள் செவ்வனே நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியடைந்ததன் பிற்பாடு அதற்காகப் பயன்படுத்தப்பட்ட தொழிலாளர்களை எவ்வாறு கொலைசெய்து விடவேண்டும் என பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதன் நம்பகத்தன்மை என்பது கேள்விகுரியதாயினும் அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் மனோநிலை யாரிடமும் இருக்காது என்பதுதான் நிதர்சனம். அந்த பங்கரின் வடிவமைப்பு முறையினைப் பார்க்கும் எவராக இருந்தாலும் இந்த விடயத்தில் அதன் நிர்மாண இரகசியம் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வர். எனவே சிலவேளைகளில் மேற்சொன்ன நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கவும் சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம்.
இறுதி யுத்தம் முடிவடைந்த சில மாதங்களின் பின்னர் விசுவமடுவில் அமைந்திருந்த பிரபாகரனின் ஒரு மறைவிடத்தையும், அதன் பின்னர் மிக அண்மையில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மற்றுமொரு மறைவிடத்தையும் சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவரை இலங்கையின் அரச ஊடகங்கள் மூலமாக அந்த மறைவிடங்களை பல முறை காணும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த மறைவிடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் எவ்வாறானதொரு உல்லாசமான வாழ்க்கையை கழித்துள்ளார் என்ற அடிப்படையிலேயே அவை பெருமளவுக்கு காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவர் பயன்படுத்திய நீச்சல் தடாகங்கள், அதி சொகுசு வாகனங்கள், மற்றும் குளிரூட்டப்பட்ட மறைவிடங்கள் என்பனவே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தெரிவுகளாக அமைந்திருந்தன. ஆனால் அந்த ஊடகங்கள் காட்சிக்கு உட்படுத்திய அல்லது உட்படுத்த விரும்பாத சில விடயங்களும் அங்கு இருந்திருக்கின்றன என்பதை அங்கு விஜயம் செய்தவர்கள் உன்னிப்பாக கவனித்தால் அவதானித்திருக்க முடியும்.
swimmingpoolபிரபாகரனின் இதுபோன்ற மறைவிடங்கள் பல எண்ணிக்கைக்குட்பட்டு இருந்துள்ளபோதிலும் அவற்றில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக யுத்த காலத்தில் பல தடவைகள் அவர் இவற்றை உபயோகித்திருப்பார் என்பதற்கான சான்றுகள் பல இருக்கின்றன. அந்த இரு மறைவிடங்களையும் கூர்ந்து அவதானிக்கின்றபோது பல நிலக்கீழ் அறைகளைக் கொண்டுள்ளதாக அந்த  இரு மறைவிடங்களும் காணப்படுகின்றன. இவை அமைக்கப்பட்டிருக்கின்ற விதமானது இயல்பாகவே ஒரு கேள்வியை அதனை பார்ப்பவர்களிடம் தோற்றுவிக்கும். அதாவது இந்த இரு மறைவிடங்களினதும் பிரதான வாயில் உட்பட சயனஅறை, குளியலறை, அந்தரங்க ஆலோசனையறை என்பனவற்றின் வாயில் பூட்டுகள், அவற்றின் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் ஏற்பாடுகள் எப்போதும் உள்நோக்கியதாகவே அமைந்திருக்கின்றன. வெளியில் இருந்து யாரும் அந்த கனதிமிக்க இரும்புக் கதவுகளை பூட்டவோ அல்லது திறக்கவோ முடியாது. அதனைப் பூட்டித் திறப்பதானால் உள்ளே இருப்பவர்தான் (பிரபாகரன்) அதனை செய்யவேண்டும்.
எனவே அவர் பகலில் ஓய்வு எடுக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் அவரேதான் அவற்றை உள்ளே பூட்டிக்கொள்ள வேண்டும். தவிர, குளியலறையில் இருக்கும்போதும் அந்தரங்க ஆலோசனை அறையில் இருக்கும்போதும் இதே நிலைதான். இவைதவிர, ஒரேயொருவர் மாத்திரமே தங்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மறைவிடங்களில் அவரைத்தவிர வேறுயாரும் தங்கியிருக்க சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. அதிலும் புதுக்குடியிருப்பு மறைவிடத்தில் அதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கின்ற போதிலும் விசுவமடு மறைவிடத்தில் அதற்கான சந்தர்ப்பம் அறவே இருந்திருக்க முடியாது. இதற்கான சந்தேகத்திற்கு இடமின்றிய சான்று அங்கு போடப்பட்டிருக்கின்ற ஒற்றையாள் தூங்கும் கட்டில் ஆகும்.
அப்படியானால் இரவிலோ அன்றில் பகலிலோ அவர் ஓய்வு எடுக்கும் போதும் தூங்கும் போதும் தனியாகவே இருந்திருக்கமுடியும். அவ்வாறான நேரங்களில் அந்த இரும்புக் கதவுகள் உட்புறமாக அவராலேயே பூட்டப்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாக, கதவினை பூட்டாமல் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே. அந்த மறைவிடங்களை சுற்றி பல கிலோமீற்றர் சுற்றளவில் அமைக்கப்பட்டிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு அவரின் பிரதான எதிரிகள் ஒருபோதும் அந்த மறைவிடத்தை இலகுவில் அடையமுடியாது. சிலவேளைகளில் அப்படியானதொரு கடுமையான யுத்தம் நடந்து எதிரிகள் அந்த இடத்தை அடையும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் அதற்கு முன்னரேயே அந்த இடத்தை விட்டும் மிகவும் பாதுகாப்பாக வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு அவரால் bunker-pelucheநகர்ந்துவிட முடியும்.
அப்படியானால் அந்த இரும்புக் கதவுகளை உள்ளாலேயே அவர் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் என்ன? தான் பகலில் ஓய்வு எடுக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் யாரிடம் இருந்து அவருக்கு முதன்மையான பாதுகாப்பு தேவைப்பட்டது? இன்சுலினை உட்செலுத்தும் தேவைப்பாட்டிற்கு உட்பட்டிருந்த ஒரு நீரிழிவு நோயாளியான அவர் எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்க முடியும். (விசுவமடு மறைவிட அறையில் அவருடைய கட்டிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இன்சுலின் கொள்கலன் இவருடைய உடல் உபாதையினை சான்றுபகர்ந்து நின்றது). இத்தகைய ஓர் சூழ்நிலையில், இயல்பாகவே குறித்த நோயின் மருத்துவ எதிர்வுகூறல் ஆபத்துக்களாக மூச்சுத்திணறலோ அல்லது மாரடைப்போ எற்பட்டிருந்தால் வெளியில் இருக்கும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் எவ்வாறு அவருக்கு உதவியிருக்க முடியும்? சிலவேளைகளில் அவர் உள்ளே இருக்கும்போது ஓர் தீவிர சிகிச்சைக்கான அவசியநிலை திடீரென ஏற்பட்டிருந்தால் அந்த இரும்புக் கதவுகளை டோசர்கள் கொண்டுதான் உடைத்து அவரை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இத்தனை பின்புலங்களைத் தெரிந்துகொண்டும் அவ்வாறானதொரு ஆபத்தை அவர் எதிர்நோக்கியுள்ளார் என்றால் அந்த ஆபத்திற்கு அப்பால் இன்னொரு சக்திக்கு பயந்திருக்கின்றார் என்பது வெளிப்படையாகும். அப்படியானால் அந்த சக்தி எது என்பதுதான் இங்கு எம்முன் எழும் கேள்வியாகும்.
மேலும் அவரின் விசுவமடு மறைவிடத்திலுள்ள அந்தரங்க ஆலோசனை அறையில் அவருடன் இன்னொருவர் மாத்திரமே அமர்ந்து உரையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் வடிவமைப்பு அதனைத் தெளிவுபடுத்திநின்றது. அந்த ஆலோசனை அறைக்கு செல்லும் தகுதி மிக முக்கியமான ஒரு சிலருக்கு மட்டுமே இருந்திருக்கமுடியும். உதாரணமாக, உளவுப்பிரிவு தலைவர், அரசியல்துறை பொறுப்பாளர், அல்லது எதேனும் படைத்துறை தலைவர் என்பவர்கள் மாத்திரமே அதற்குள் நுழைவதற்கும் கலந்தாலோசனை செய்வதற்குமான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கமுடியும். அப்பேற்பட்ட நம்பிக்கைக்குரிய தலைவர்களைக் கூட அவர் அவ்வாறானதொரு பூட்டிய நிலக்கீழ் அறையில் தனியாகவே சந்திக்க விரும்பி இருக்கின்றார்; ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை தனியாக சந்திக்க அவர் விரும்பியிருக்கவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? சிலவேளை அவ்வாறானதொரு நிலக்கீழ் அறையில் பலர் உட்கார்ந்து பேசக்கூடிய அறையினை அமைப்பது ஒரு கடினமான பணி என சிலர் வாதாடலாம். ஆனால் குறைந்த பட்சம் இருவருடனாவது அமர்ந்து பேசக்கூடிய முறையில் அதனை வடிவமைப்பது என்பது ஒன்றும் பெரியதொரு கடினமான காரியமாக இருந்திருக்க முடியாது அல்லவா? 
எனவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது பாதுகாப்பு மறைவிடத்தினுள் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் தன்னைச் சுற்றியிருக்கின்ற தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் தனது மிக நெருக்கமான தளபதிகள் தொடர்பிலும் ஒருவித அச்சத்திலும் முன் எச்சரிக்கையுடனும் இருந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதாவது தனது பிரதான எதிரிகளிடமிருந்து (இலங்கை அரச படைகள்) தன்னைப் பாதுகாப்பது ஒருபுறமிருக்க, தன்னுடன் கூடவே இருந்த நம்பிக்கைக்குரியவர்கள் என கருதப்பட்டவர்கள் மீதும் அதிகம் சந்தேகமும் விழிப்பும் கொண்டிருந்தாரா?
Prabakaran roomன்னொருபுறமாக, இறுதி யுத்தத்தில் அவருடைய மரணம் சம்பவிப்பதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த கடைசியான மறைவிடம் என கருதப்படும் புதுக்குடியிருப்பு மறைவிடமானது அவரது வேறோர் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டினைக் கொண்டிருந்தமையை நாம் அவதானிக்கலாம். அதாவது நான்கு நிலக்கீழ் அறைகளைக் கொண்ட இந்த மறைவிடத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கின்றது. அந்த சுரங்கப்பாதையானது பிரதான மறைவிடத்தைத் தாங்கி நிற்கின்ற கட்டிடத்தின் பின்புறமாக சில மீற்றர்கள் தொலைவிலேயே தனது வெளியேறும் வாசலை கொண்டிருக்கின்றது. அப்படியானால் இங்கும் அதே கேள்வி எழுகின்றது அல்லவா? காரணம் தனது பிரதான எதிரியிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவரின் நிலக்கீழ் மறைவிடத்தை எதிரி நெருங்கும் முன்னர் ஏற்கனவே அந்த பிரதேசம் அவர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அப்படியானால் எவ்வாறு அவ்விடத்திலேயே உள்ள ஒரு வாசல் மூலம் தப்பிக்க முடியும்?
இந்த விடயத்திலும் முன்னைய வாதம் பொருந்திச்செல்வதனைக் காணலாம். அதாவது அவரது அந்த மறைவிடத்தை எதிரிகள் இலகுவில் நெருங்க முடியாது. அவ்வாறு நெருங்கும் நிலை ஏற்படுமானால் அதற்கு முன்பே அவர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட முடியும். அவ்வாறுதான் இறுதி யுத்தத்தின்போதும் வெளிச்சென்றிருந்தார். சிலவேளைகளில் விமானத்தாக்குதல் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பிரதான வாசல் வழியாக வெளியேற முடியாத அளவுக்கு அந்த வாசல் சேதமாக்கப்படும் போது அவர் இந்த அவசர பாதையினை பயன்படுத்தும் நோக்கமும் இருந்திருக்கலாம். ஆனால் இவைதவிர மற்றுமொரு முக்கிய காரணமும் அங்கு இருந்துள்ளதாகவே தென்படுகிறது. அதாவது சிலவேளைகளில் தன்னுடன் கூடவே இருப்பவர்களால் ஒரு ஆபத்து ஏற்படுமிடத்து அதிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னேற்பாடாகக் கூட இது அமைந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. காரணம் அந்த சுரங்கப் பாதை வெளியேறும் இடத்தில் இருபக்கமும் அவரது பாதுகாவலர்கள் இருப்பதற்கான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் அவசர உதவியை பெறுவதற்கு இதுவே சரியான பாதுகாப்பு முறையாக கருதப்பட்டிருக்கலாம். எதிரியிடம் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் அந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதன் வெளியேறும் வாசல் குறைந்தபட்சம் ஒரு சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் அடர்ந்த காட்டினுள் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
இந்த அனைத்து அடிப்படைகளினூடும் பார்க்கின்றவிடத்து, விடுதலைப் புலிகளின் தலைவரின் பாதுகாப்பு விடயம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் என்பன அவரது பிரதான எதிரிகளிடம் இருந்து அவரை பாதுகாப்பதை மட்டும் நோக்காகக் கொண்டு அமைந்திருக்கவில்லை. மாறாக அவருடன் கூட இருந்த விசுவாசமிக்க மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் என்போரிடமிருந்தும் அவரைப் பாதுகாப்பதாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவு. இவ்வாறான மறைவிடங்களை அமைப்பதற்கு முன்னர் அவர் தன்னுடைய இயக்கத்தினுள் கண்ட அனுபவங்கள் ஒருவேளை இதற்கு காரணமாய் அமைந்திருக்கலாம். உதாரணமாக விடுதலைப் புலிகளின் வரலாற்றிலேயே பிரபாகரனுக்கு அடுத்த படியாக பிரதித் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்ட ஒரேயொரு நபரான மாத்தையா (மகேந்திர ராசா) தனக்கும் தனது இயக்கத்திற்கும் எதிராக (“றோ” வுடன் சேர்ந்து கூட்டுச்) சதிசெய்தமை போன்ற விடயங்களை கூறலாம். இதுதவிர, அதற்கு முன்னரும் பல உள்வீட்டு சதிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தமை என்பன அவரை இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தூண்டி இருக்கலாம்.
எது எவ்வாறாயினும் தனது இன்னுயிரை எதிரிகளிடமிருந்தும் தன்னுடன் கூடவே இருந்தவர்களிடமிருந்தும் அவர் காப்பாற்றிக் கொள்வதற்கு கடும் பிரயத்தனம் செய்யவேண்டிய நிலை இருந்திருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை. பல தியாகங்களின் மத்தியிற்தான் ஓர் இலட்சியத்துடன் முன்னிறுத்திய போராட்டத்தை நீண்ட காலமாக வழிநடத்திச் சென்றிருக்கின்றார் என்பதுதான் யதார்த்தம். அதனால் தானோ என்னவோ அவருடைய இலட்சிய நினைவுகளைப் பின்தள்ளிப்போடுவதற்கு விரும்பாதவர்களாகவும்; ஓர் உத்தம தலைவனாகவும் கருதி அவரது புகைப்படத்தை இன்றும் தமது வீட்டுச்சுவர்களில் மாட்டியும்; பூஜை அறைகளில் வைத்து சூரியதேவனாக பலர் வழிபடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. வெளி உலகிற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு தண்டனைக்குரிய கொடூரமான பயங்கரவாதியாக தென்பட்டாலும் அவரின் ஆதரவாளர்களுக்கு அவர் எப்போதும் ஒரு மாமனிதனாகவே தென்படுகிறார். இதற்கான எடுத்துரைப்புகளாக அவர் செலுத்திய விலைகளையும்; செய்த தியாகங்களையும் பறைசாற்றி நிற்கும் அவரது பாதுகாப்பு மறைவிடங்களே சாட்சியங்களாகும்

Aucun commentaire:

Enregistrer un commentaire