samedi 1 février 2014

இலங்கை தேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன் டொலர் வருவாய்

இலங்கையின் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் தேயிலை உற்பத்தி 2013 ஆம் ஆண்டில் இதுவரை பெற்ற மிகக் கூடிய வருமானமாக அமெரிக்க டொலர் 1.54 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. எதிர்வரும் காலங்களில் தேயிலை மீள் நடுகையின் மூலம் தேயிலை உற்பத்தியை பலமடங்காக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த தேயிலை உற்பத்தி 319.6 மில்லியன் கிலோவாகும். 2012 ஆம் ஆண்டு இது 319.9 மில்லியன் கிலோவாக இருந்தது. இதேவேளை வருடாந்த தேயிலை உற்பத்தியானது 7 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.
எமது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 16 வீதத்தை கொள்வனவுசெய்யும் நாடாக ரஷ்யா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. ஈரான் 12 வீதத்தை கொள்வனவு செய்துள்ளதுடன் துருக்கி 10 வீதத்தை கொள்வனவு செய்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகின்றது
அதேபோன்று மத்திய கிழக்கின் இதர நாடுகளுடன் வட ஆபிரிக்க நாடுகளும் எமது நாட்டுத் தேயிலையை கொள்வனவு செய்ய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையை இவ்வாண்டிலும் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தேயிலை மீள் நடுகையின் மூலம் தேயிலை உற்பத்தியை பலமடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.
சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தி யாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உர மானியம் வழங்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன என்றார்.
உலகின் முன்னணி ஏல விற்பனை மையங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையே மிக உயர்ந்த விலைக்கு அதாவது ஒரு கிலோ தேயிலையின் விலை அமெரிக்க டொலர் 3.44 என்ற நிலையை எட்டியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire