காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.
டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் உடன் இருந்தார்.
மக்களவை உறுப்பினர் விஜயசாந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆசி பெற்றதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறும்போது, "தெலங்கானா விவகாரத்தை எழுப்பிய முதல் நடிகையான விஜயசாந்தி, காங்கிரஸில் இணைய முடிவு செய்ததை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சோனியா காந்தியிடம் அவர் ஆசி பெற்றார்.
தெலங்கானாவுக்கான தனது போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைந்ததாக விஜயசாந்தி கூறியிருக்கிறார்" என்றார் திக்விஜய் சிங்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேடாக் எம்.பி. விஜயசாந்தி, காங்கிரஸுடன் கட்சியை இணைப்பதற்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைமை விரும்பாததை தாம் ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தமது டி.ஆர்.எஸ். இணைந்துவிடும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அத்தகைய யோசனை தம்மிடம் இல்லை என்று சந்திரசேகர ராவ் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.