mardi 25 février 2014

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த விஜித தேரர் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வருவதாக‌ தகவல் வெளியிட்டுள்ளார்

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இந்நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினரின் உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த எனக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் என்றுகூட பார்க்காது பொது பலசேனா கொலை அச்சுறுத்தல் விடுத்தது. இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன்.
எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறி பொது பல சேனாவுக்கெதிராக மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறைப்பாடொன்றை செய்ததுடன் அவ்வமைப்பை தடைசெய்யுமாறு கோரி மனுவொன்றையும் கையளித்தேன். ஆனால், இதுவரை காலமும் இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸாரிடம் தஞ்சமடைந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்நாட்டில் சிறுபான்மையினருக்காக குரல் குடுப்பவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஆளுக்கட்சி உறுப்பினராக இருந்தும்கூட பொதுபலசேனாவுக்கு அஞ்சி சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன்.
எனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஜனாதிபதியிடமும் முறையிட தொடர்புகொள்ள முயற்சித்தபோது அதற்கான சரியான தருணம் எனக்கு அமையவில்லை. எனவே,இது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி பொது பலசேனா போன்ற இனவாத அமைப்புகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire