jeudi 27 février 2014

நளினி உள்ளிட்ட நான்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை

 தமிழக அரசின் இந்த முடிவுக்கு மார்ச் 6-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நளினி உள்ளிட்ட 4 குற்றவாளிகளை தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து பெப்ரவரி 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.
கடந்த வாரம் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்த இடைக்கால தடை உத்தரவுடன் சேர்த்து இந்த நான்கு குற்றவாளிகளின் விடுதலைக்கும் இடைக்காலத் தடை அளிக்கப்படுவதாக இந்தியத் தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதி அன்று தீர்ப்பளித்திருந்தது.

அதனை தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.
முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரை விடுவிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் ஆட்சேபணைகள் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மட்டும் பொருந்தும் என்பதால் மீதம் உள்ள நளினி உள்ளிட்ட 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வேறு ஒரு மனு தாக்கல் செய்தது. எனினும் இந்த இரண்டு மனுக்களையும் ஒரே விசாரணையாக உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire