mardi 18 février 2014

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை நினைத்து பார்க்கிறோம்;ஞானதேசிகன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:–

இந்தியா, சட்டத்தின் மாட்சிமையை மதிக்கும் நாடு. சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு சொல்லும்போது அந்த தீர்ப்பின் முடிவை விமர்சிக்க முடியாது. எனவே இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் சில பேர் இவர்கள் 3 பேரும் குற்றமற்றவர்கள். ராஜீவ் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பேசி வருகிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிறகும் பேசுகிறார்கள்.

ஆனால் கருணை மனு செய்த மூன்று பேருமே சுப்ரீம் கோர்ட் வழங்கிய மரண தண்டனையை ஏற்றுக்கொண்டு தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்கள்.

நாங்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அடுத்ததாக கருணை மனுவை ஆய்வு செய்து முடிவுக்கு கொண்டு வர 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற போதுமான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது சட்ட நுணுக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. கொலை செய்யவில்லை என்பதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல.

எந்த இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி பாடுபட்டாரோ அதற்காக ஸ்ரீபெரும்புதூர் மண்ணில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை நினைத்து பார்க்கிறோம்.

இந்த நாளில் அவரோடு மரணம் அடைந்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கும், பலியான பொதுமக்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire