lundi 3 février 2014

இந்திய வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிப்பில் மோசடிகள் வீட்டுத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை ஏற்படுத்தி, மீண்டுமொரு யுத்த மோதலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி வவனியாவில் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்களன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் வவுனியா மாவட்டத்தில் அதிகமாக வாழும் தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி கடந்த வாரம் வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என மூவினங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், அமைச்சரினால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படவில்லை என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இனவாதத்தைத் தூண்டுவதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிக்கும் உருவம் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் ஏந்திச் செல்லப்பட்டு தீயிடப்பட்டது.
இந்திய வீட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய முயற்சிக்கு இடம்கொடுக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை, ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் கையளித்தனர்.

'தமிழர்கள் மீது அரசியல் பழிவாங்கல்'

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 29-ம் திகதி வவுனியாவில் நடத்திய ஆர்ப்பாட்டம்
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 10,209 தமிழ் குடும்பங்ளுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளபோதிலும், 1,938 குடும்பங்கள் மட்டுமே இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்று கட்டங்களிலும் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
அதேநேரம், இந்த மாவட்டத்தில் 773 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு 545 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் குடும்பங்களைப் பொறுத்தமட்டில் 1,483 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு, 1634 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் அரசியல் பழிவாங்கல் நோக்கிலும் அரசியல் இலாபம் கருதியும் இந்திய வீட்டுத் திட்டத்தில் பாகுபாடாக நடத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire