vendredi 21 février 2014

தலாய் லாமா கருத்து;இந்தியா-சீனா போட்டி ஆசியாவிற்கு நல்லதல்ல

அமெரிக்காவிற்கு இருவாரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புத்தமதத் தலைவர் தலாய் லாமா அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்வது ஆசிய கண்டத்திற்கு மட்டுமின்றி திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல. பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான நல்ல உறவுகள், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம். அதேபோல் கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும். 
தற்போது சீன அதிபராக இருக்கும் ஸி ஜின்பிங், ஊழலை எதிர்த்து தைரியத்துடன் சிறப்பாக செயலாற்றக் கூடியவர். ஆனால் தணிக்கை முறை பரவலாக நடைபெற வேண்டும்.
சீனாவில் உண்மையான வளர்ச்சி என்பது, கிராமப்புற பகுதிகளில்தான் ஏற்பட வேண்டும். இதன் பொருள் நகரங்களை உருவாக்குவது அன்று.
மேலும், சீன நீதித்துறை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுவர். சீனாவின் பெய்ஜிங் நகரம் மிகப்பெரிய பொருளாதார நகரமாக உருவெடுக்கும்.
சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை ஆகியவையே அமெரிக்காவின் கொள்கைகளாகும். ஆனால் ஆப்பிரிக்கா, சிரியா போன்ற நாடுகளில் நீதிக்கொள்கைகள் இல்லாத காரணத்தினால் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. நீதிக்கொள்கையினை இழந்துவிட்டால் எந்தவொரு நாட்டிற்கும் வளமான எதிர்காலம் இல்லை.
மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் காலநிலைகள் வேறுபடுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடதுருவம் உருகுவதாக கூறுகின்றனர். நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire