mardi 18 février 2014

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிக‌ள் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது,ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.இதற்கான சதியில் ஈடுபட்டதாகக்கூறி 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முருகன், சாந்தன்,பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தூக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் கருணை மனுக்கள் 1999ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது.எனினும், அதற்கடுத்த ஆண்டு, நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் தமிழக ஆளுநர் குறைத்தார்.இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.கடந்த, 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, இவர்கள் மூவரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.
இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011, செப்டம்பர் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெருக்கடி முற்றிய நிலையில், 2011, ஆகஸ்ட் 30ம் தேதி, தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஜனவரி 21ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் குடியரசுத் தலைவரால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
கருணை மனுக்களை தேவையின்றி நீண்ட காலம் கிடப்பில் போட்டால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.
மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல மூவரின் விடுதலைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire