dimanche 16 février 2014

கேவலப்படுத்தும் மொழிபெயர்ப்புகள் – சிறிலங்கா அரசு விசாரணை

தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானதும், தவறானதுமான, மொழிபெயர்ப்புகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

சிங்கள மொழியில் சரியாகவும், தமிழ்மொழியில் அதன் மொழிபெயர்ப்பு தவறாக இடம்பெற்றதுமான விடயங்கள் குறித்து 218 முறைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக, தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் மகேந்திர ஹரிச்சந்திர  ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். 

இவற்றில், 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று, தவறாக பேருந்துகளில் எழுப்பட்டுள்ளதும் அடங்கும்.
wrong-board2.jpg
wrong-board1.jpg
இது தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானது என்ற குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ளது. 

தமது அமைச்சுக்கு செய்யப்பட்ட 218 முறைப்பாடுகளில், 91 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு, அவற்றைத் திருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதற்குப் பொறுப்பானவர்கள் தவறகளைத் திருத்திக் கொள்வதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகேந்திர ஹரிச்சந்திர கூறியுள்ளார். 

குறிப்பாக பேருந்துகளில் 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று எழுதப்பட்டது, பெரும் இழிவுபடுத்தல் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு அதை எழுதிய ஓவியரே காரணம் என்றும் அவருக்கு சரியாக மொழி தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire