lundi 8 juillet 2013

இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஏ திருத்தத்தை மாற்றுவதைக் கைவிட மாட்டோம்

இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஏ திருத்தத்தை மாற்ற வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் மூத்த அமைச்சர் பசில் ராஜபட்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார்.இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவின் ஆலோசனைப்படி, இலங்கையில் மாகாணங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் 13ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்களும் வழங்கப்பட்டன.
இதனிடையே, இவ்வாறு மாகாணங்களுக்கு அதிகாரம் அளிப்பதால் நாடு பிரிவினையைச் சந்திக்க நேரிடும் என்று அதிபர் ராஜபட்சவின் கூட்டணிக் கட்சிகள் சமீபக காலமாக இலங்கை அரசை எச்சரித்து வருகின்றன. 13ஆவது சட்டத் திருத்தத்தை மாற்ற வேண்டும் என்றும் அவை ராஜபட்சவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால், அக்கட்சிகளின் நெருக்கடிக்குப் பணிந்து 13ஏ சட்டத் திருத்தத்தை மாற்ற வேண்டாம் என்று இலங்கையை இந்தியா கோரி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் தில்லி வந்த இலங்கையின் மூத்த அமைச்சரும், அதிபரின் சகோதரருமான பசில் ராஜபட்ச, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்தித்துப் பேசினார்.
அதன் பின் கொழும்பு திரும்பிய அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 13ஏ சட்டத்திருத்த விவகாரத்தில் இந்தியா நிபந்தனை ஏதாவது விதித்ததா? என்றும் இத்திருத்தத்தில் மாற்றம் செய்வதற்கு முன் தன்னைக் கலந்து ஆலோசிக்குமாறு இந்தியா வலியுறுத்தியதா? என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். அவற்றுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து, பசில் ராஜபட்ச கூறியதாவது:
நாங்கள் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தால், அதை வழக்கமாக வாபஸ் பெற மாட்டோம். மக்கள் விரும்பினால்தான் அதைத் திரும்பப் பெறுவோம். மக்களின் விருப்பப்படி நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா வலியுறுத்தியதா என்பதைப் பொறுத்தவரை, சில விஷயங்கள் நிச்சயமாக ரகசியமாகவே இருக்க வேண்டும்.
தில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தை சிறந்த கருத்துப் பரிமாற்றமாக இருந்தது. 13ஏ சட்டத்திருத்தம் தொடர்பான பரிசீலனைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகின்றனர் என்றார் பசில் ராஜபட்ச

Aucun commentaire:

Enregistrer un commentaire