jeudi 11 juillet 2013

எந்தவொரு சமூகமும் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை; இந்திய ஊடகம்

13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒழிப்பதானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால், தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டிய சிறிலங்காத் தமிழர்கள் மேலும் புறம்தள்ளப்படுவார்கள். 

இவ்வாறு The New Indian Express எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்தள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் திங்களன்று கொழும்பில் வைத்து சிறிலங்காத் தலைவர்களைச் சந்தித்த போது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காத் தலைவர்களிடம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதென்பது உண்மையில் சிவ்சங்கர் மேனனுக்கு மிகக் கடினமான பணியாகக் காணப்படுகிறது. 

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் யாப்பிலிருந்து நீக்குவது எனத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம், சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா அதிபரின் சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் சந்தித்துக் கலந்துரையாடிய போது 13வது திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தெளிவாக எடுத்துரைத்திருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி நிலவுவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் தொடர்பாக ஒரு சில மாதங்களின் முன்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், 13வது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தொடர்ச்சியான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். தாம் பெரும்பான்மை சமூகத்தின் ஆளப்படும் தலைவர்களால் ஏமாற்றப்படுவதாக தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வர். 

1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – சிறிலங்கா உடன்படிக்கையின் விளைவாகவே 13வது திருத்தச் சட்டம் வரையப்பட்டது. இத்திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்காவில் இனப்பிரச்சினை உச்சம் பெற்றிருந்தது. இதனால் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சமாதானத்தை நிலைநிறுத்துமாறு இந்தியாவிடம் சிறிலங்கா கோரியிருந்தது. ஆனால், இதன் பின்னர் இரு ஆண்டுகளில், சிறிலங்கா இராணுவமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டது. 

தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமக்கெதிரான அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதால் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என சிறிலங்கா அரசு கருதிக்கொண்டது. எந்தவொரு சமூகமும் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வாழ்ந்ததாக வரலாறு சுட்டிக்காட்டவில்லை. 

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் சமாதானமாக வாழ்வதற்கு 13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒழிப்பதானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால், தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டிய சிறிலங்காத் தமிழர்கள் மேலும் புறம்தள்ளப்படுவார்கள் என்பதை மேனன் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire