mercredi 24 juillet 2013

பயங்கர பூகம்பம் 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது. அதில் 89 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. சீனாவின் வடமேற்கே கான்சு மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள மின்ஷியான் மற்றும் ஷாங்ஷியான் பகுதிக்கு இடையே நேற்று காலை 7.45 மணிக்கு 6.6 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த 90 நிமிடத்தில் அதே பகுதியில் 9.12 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. அது 5.6 ரிக்டர் அளவில் பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு நிமிடமே குலுக்கிய இந்த பூகம்பம் அந்த பகுதியில் உள்ள 8 நகரங்களை புரட்டி போட்டது. மாகாணத்தின் தலைநகர் லான்ஹோவு மற்றும் பக்கத்து மாகாணத்திலும் நிலநடுக்க தாக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி ஏற்கனவே மழை, நிலச்சரிவால் பாதிப்பை சந்தித்திருந்தது. எனவே நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 21 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. அதில் 1,200 வீடுகள் அடியோடு இடிந்து தரைமட்டமாகி விட்டன. மின்ஷியானில் ஒரு பள்ளிக்கூட கட்டிடமும் இடிந்தது. ஆனால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.
அத்துடன் 13 நகரங்களில் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டன. மின்சார சப்ளையும் இல்லை. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இந்த பூகம்பத்தில் 89 பேர் உயிர் இழந்தனர். டிங்ஜி நகரில் மட்டும் 73 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு செஞ்சிலுவை சங்க குழு, தற்காலிக கூடாரங்களுடன் விரைந்தனர். மேலும் 3,000 ராணுவத்தினர், போலீசார் சென்று மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் அந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பதால் மீட்பு பணி பாதிக்கும் அபாயமும் நிலவுகிறது.
தற்போது பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகேயுள்ள சிஹூயான் மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 164 பேர் செத்தார்கள். மேலும் 6,700 பேர் படுகாயம் அடைந்தனர். 3 மாதத்திற்குள் இப்போது மீண்டும் உயிர் பலி ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பு 2008-ம் ஆண்டு மே மாதம் 7.9 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire