mercredi 3 juillet 2013

அரசாங்கத்தின முட்டாள்தனமான முடிவு 1983 ஜுலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது.

பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. 

இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். 

“ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். 

துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு மீளஉயிர் கொடுத்தது. 

ஒப்பரேசன் லிபரேசனைத் தொடர ஜே.ஆருக்கு இந்தியா அனுமதி அளித்திருந்தால் அப்போதே எம்மால், தீவிரவாதத்தை அழித்திருக்க முடியும். 

இந்தியா எம்மீது திணித்த உடன்பாடு அவர்களையே போருக்குள் தள்ளிச் சென்றது. 

1983 ஜுலையில் யாழ்ப்பாணத்தில் 13 படையினர் கொல்லப்பட்ட பின்னர், கொழும்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, ஆயிரக்கணக்கான தமிழர்களை அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது. 

அது அரசாங்கத்தின முட்டாள்தனமான முடிவு. அந்தச் சூழலை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர். 

யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்களை அவர்கள் ஆட்சேர்ப்புச் செய்தனர். 

அவர்களில் பலர் இந்தியாவில் பயிற்சி பெற்று சில மாதங்களிலேயே போருக்குத் தயாராக திரும்பி வந்தனர். 

1985 டிசெம்பர் இரண்டாவது வாரத்தில், பாகிஸ்தான் அதிபர் ஷியா உல் ஹக் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா இராணுவம் உண்மையில் பெரிய சமருக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. 

இளம் படையினருக்கு துரிதமாக பயிற்சிகள் அளிக்க வேண்டியிருந்தது. கேணல் விஜய விமலரட்ண ஆணையிடும் அதிகாரமில்லாத அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சித் திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். 

பாகிஸ்தான் அதிபர் ஷியா உல் ஹக் தலையிட்டு, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பயிற்றுனர்கள் மூலம் அதிகளவில் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்தார். 

அவர் நாடு திரும்பியதும் சிறப்பு சேவைக் குழுவைச் சேர்ந்த பிரிகேடியர் தாரிக் மெஹ்மூத்தை அனுப்பி வைத்தார். அவர் சாலியபுரவில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கினார். 

சாலியபுர பயிற்சித் திட்டம், ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த ஒரு திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு கடமைப்பட்டுள்ளோம். 

பாகிஸ்தானின் உதவி கிடைத்திருக்காது போயிருந்தால், அந்த நேரத்தில் பெரிய படை நடவடிக்கைக்குத் தேவையான பயிற்சிகளை எம்மால் பெற்றிருக்க முடியாது. 

கொழும்பிலும் இஸ்லாமாபாத்திலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் சிறிலங்காவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் எப்போதுமே துணையாக நின்றுள்ளது.  பிரிகேடியர் தாரிக் மெஹ்மூத் அடிக்கடி சாலியபுர முகாமுக்கு வந்து, பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதை உறுதிப்படுத்தினார். 

ஒப்பரேசன் லிபரேசனுக்காக பல நூற்றுக்கணக்கான படையினர் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். 

ரி.எம் என்று அழைக்கப்பட்ட பிரிகேடியர் தாரிக் மெஹ்மூட் 1989 மே 29ம் நாள் விபத்து ஒன்றில் மரணமானார். 

1987 மே 26ம் நாள் ஒப்பரேசன் லிபரேசன் ஆரம்பிக்கப்பட்ட போது. பிரிகேடியர் மெஹ்மூத் பலாலி விமானப்படைத் தளத்துக்கு பறந்து சென்றார். அது சிறிலங்காவின் பாதுகாப்பில் பாகிஸ்தான் கொண்டிருந்த கடப்பாட்டை வெளிப்படுத்தியது. 

குடிசனச் செறிவுள்ள பிரதேசத்தில் போரிடுவது குறித்த பயிற்சிகள் எமக்குத் தேவைப்பட்டன. 

உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து அப்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் அதற்கான பயிற்றுனர்களை அனுப்பி வைத்தது. 

சாலியபுரவில் 1986 தொடக்கத்தில் ஆணையிடும் அதிகாரமில்லா அதிகாரிகள் மற்றும் இளநிலை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானிய அதிகாரிகள் சிறப்பு பயிற்சிகளை ஆரம்பித்த போது, இஸ்ரேலியர்களும் வந்தனர். 

பாகிஸ்தானிய பயிற்றுனர்கள் சாலியபுரவில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளித்தனர். 

அதேவேளை இஸ்ரேலியப் பயிற்சித் திட்டம் மாதுறுஓயாவில் இடம்பெற்றது. 

மேஜர் தரத்திலான அதிகாரிகள், போரிடும் பற்றாலியன்களின் இரண்டாவது கட்டளை அதிகாரிகள், கப்டன்களுக்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி அளித்தனர். 

அப்போது மேஜராக இருந்த நானும் [கோத்தாபய ராஜபக்ச], சரத் பொன்சேகாவும் மாதுறுஓயாவில் இஸ்ரேலியர்களிடம் பயிற்சி பெற்றோம். 

இஸ்ரேலியர்களின் பயிற்சித் திட்டம், கட்டடப் பிரதேசத்தில் போரிடுதல் [FIBUA –Fighting In Built-Up Areas]என்று அழைக்கப்பட்டது. 

இதற்கு நாம் புதியவர்களாக இருந்தோம். உண்மையான சூட்டுப் பயிற்சியின் போது நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 

இத்தகைய உண்மையான சூட்டுப்பயிற்சி தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாது போனால், தவறாக முடிந்து போகும். FIBUA பயிற்சியின் போது, மாதுறுஓயாவில் பொறியியல் படைப்பிரிவின் ஒரு அதிகாரி கொல்லப்பட்டார். 

பாகிஸ்தானியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் வழிகாட்டலில் தான், சிறிலங்கா இராணுவம் தீவிரவாதத்துக்கு எதிராக எவ்வாறு போரிடுவது என்று கற்றுக் கொண்டது. 

சாலியபுரவிலும் மாதுறுஓயாவிலும் வழங்கப்பட்ட பயிற்சிகள் எமக்கு நம்பிக்கையை அளித்தன. 

தீவிரவாதத்தை இராணுவ வழிமுறையின் மூலம் ஒடுக்கலாம் என்பதை உணர்ந்தோம். 

உண்மையில், பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் பயிற்சித் திட்டங்கள் தான், ஒப்பரேசன் லிபரேசனின் வெற்றிக்கு காரணம். 

மோதலின் முக்கியமான தருணத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் எமக்கு நம்பிக்கையை அளித்தனர். 

சிறிலங்கா இராணுவம் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெற்றிருக்காது போனால், நாம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருப்போம். 

தீவிரவாதத்தை சிறிலங்கா இராணுவத்தினால் தனது சொந்த முயற்சியால் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்க முடியாது. 

அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, சனல் தீவை தளமாக கொண்ட மேசினறி குழுவான கினிமினி எனப்படும் கேஎம்எஸ்சின் சேவையை பெற்றார். கேஎம்எஸ் அதிகாரிகள் பரந்துபட்ட சேவைகளை வழங்கினர். 

விமானிகள் பற்றாக்குறையால், வேறு வழியின்றி சிறிலங்கா விமானப்படை கேஎம்எஸ் விமானிகளை வாடகைக்கு அமர்த்தியது. 

சிறிலங்கா இராணுவம் காலாற்படை பயிற்சிகளுக்காக பயிற்றுனர்களை பெற்றது. அவர்கள் பிரித்தானியாவின் சிறப்பு படைப்பிரிவான சிறப்பு வான் சேவைப் படைப்பிரிவில் முன்னர் பணியாற்றியவர்கள். 

தென்னாபிரிக்கர்களும், சில முன்னாள் சோவியத் ஒன்றிய நிபுணர்களும் கூட இருந்தனர். பாகிஸ்தான் இஸ்ரேலிய திட்டங்களுடன் ஒப்பிடும் போது, கேஎம்எஸ்இன் பங்களிப்பு மிகவும் குறைவானது. 
ஆனாலும், அது முக்கியமானது. சில கேஎம்எஸ் அதிகாரிகள் நடவடிக்கைப் பிரதேசத்தை அண்டிய பலாலியில் நிலைகொண்டிருந்தனர். 

சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா விமானப்படை என்பன கேஎம்எஸ்சின் சேவையைப் பெறுவதற்கு முன்னர், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையே கேஎம்எஸ்சின் பயிற்சிகளைப் பெற்றது.”

Aucun commentaire:

Enregistrer un commentaire